கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் நிருவாக குழு உறுப்பினர்களுக்கும் சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ பைசல் காசிம் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை காலை அமைச்சரின் நிந்தவூர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான எம்.எச். ரிஸ்பின் அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராஹிம் அமைப்பின் சுகாதார அலுவல்கள் தலைவர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம். பாரூக் கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்திய சாலையின் பணிப்பாளர் முகம்மது இசாக் மற்றும் அமைப்பின் நிருவாக செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி விசேட கலந்துரையாடலலில் கல்முனை மற்றும் அதை சார்ந்த பிரதேசங்கள் சுகாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் முன்னேறி வரும் அதேவேளையில் பிராந்திய ரீதியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் ஏனைய பிராந்திய அபிவிருத்தி செயர்த்திட்டங்கள் தொடர்பாக கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக இராஜங்க அமைச்சர் அவர்களிடம்
கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பினால்
பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன
01. கல்முனையில் அமைச்சரின் நிதி ஒதுக்கீடு மூலம் துரிதமாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மேற்கொள்ளவேண்டிய இறுதி கட்டுமானப் பணிகள் மற்றும் ஏனைய பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை அமைச்சர் வழங்க வேண்டும்.
02.கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் புதிதாக அமையவிருக்கும் (Accidental and Emergency Unit) விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்
03. கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சீ ரி ஸ்கேன் வசதிகளை உடன் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளல்
04. நற்பிட்டிமுனை மக்களின் அவசிய தேவையாக உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிராந்திய காரியாலயம் ஒன்றை அமைக்க வேண்டும்
05. வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக மருத்துவ அறிக்கை (Medical Certificate for Vehicle License) பெரும் பிராந்திய நிலையம் ஒன்றை உடன் கல்முனையில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்
07. கல்முனைப் பிராந்தியத்தில் காணப்படும் ஏனைய வைத்திய சாலைகளை ஒன்றிணைத்து அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளல்
போன்ற கோரிக்கைகள் சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ பைசல் காசிம் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் தான் விஷேட கவனம் செலுத்துவதாகவும் மாவட்டம் தழுவிய ரீதியில் பல்வேறுபட்ட சுகாதார அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும்
தான் வாக்களித்த படி கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டியும் அதற்கான நவீன ரக உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் போன்றவற்றையும் உடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார அபிவிருத்தி தொடர்பில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் மிக விரைவாக கல்முனை பிராந்திய மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களையும் சுகாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த நிலையங்களாக மாற்றுவேன் என்றும் உறுதியளித்தார்.
மேலும் அமைச்சரின் கடந்தகால சுகாதார அபிவிருத்தி செயற்பாடுகள் மாவட்டம் தழுவிய ரீதியில் பல மில்லியனுக்கு மேற்பட்ட நிதிகளை ஒதுக்கி எமது மாவட்டத்தில் சுகாதார அபிவிருத்தி பணிகளை மேலோங்கச் செய்த பெருமைக்காக இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பினால் பொன்னாடை அணிவித்து கெளரவித்த குறிப்பிடத்தக்கதாகும்.