காரைதீவு பிரதேசசபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி!

உபதவிசாளர் மற்றும் 2சுயேச்சைஉறுப்பினர்கள் எதிர்ப்பு!
காரைதீவு நிருபர் சகா-
காரைதீவுப் பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரணை எட்டு(8)ஆதரவு வாக்குகளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் 10ஆவது மாதாந்த அமர்வும் வரவுசெலவுத்திட்ட அமர்வும் (10) திங்கட்கிழமை சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது வரவுசெலவுத்திட்டப் பிரேரணையை உறுப்பினர் ஸ்ரீல.மு.கா உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் முன்மொழிய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஜெயராணி வழிமொழிந்தார்.
வரவுசெலவுத்திட்ட பிரேரணை தொடர்பான கருத்துக்கள் சகல உறுப்பினர்களாலும் சபையில் தெரிவிக்கப்பட்டன.

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.
த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சபாபதி நேசராசா நடுநிலைவகித்தார்.
மு.கா.உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எம்.றனீஸ் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களான த.மோகனதாஸ் எஸ்.ஜெயராணி அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஜலீல் சுயேச்சை உறுப்பினரான எம்.பஸ்மீர் ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினரான மு.காண்டீபன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். இறுதியில் தவிசாளர் கி.ஜெயசிறிலின் வாக்கும் ஆதரவாக அளிக்கப்பட்டது.
அதன்படி எட்டு வாக்குகளைப்பெற்று 2019ஆம் ஆண்டுக்கான காரைதீவுப்பிரதேசசபையின் தற்போதைய தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையிலான சபையின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது.
வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக அண்மையில் சகல உறுப்பினர்களின் ஆலோசனை பெறும்முகமாக ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது.அதில் கணக்காளரும் செயலாளரும் அது தொடர்பாக பூரண விளக்கமளித்தனர். அங்கு சகல உறுப்பினர்களும் அதிலுள்ள ஒருசில குறைபாடுகளைச்சுட்டிக்காட்டியதையடுத்து அனைத்தும் திருத்தம் செய்யப்பட்டது. அதனை ஏகமனதாக சகலரும் ஏற்றுக்கொள்வதென்று முடிவானது.
இருந்தபோதிலும் இன்றைய அமர்வில் ஒருசில கணக்கைக் காரணங்காட்டி மேற்படி மூவரும் எதிர்த்துவாக்களித்தமை ஏனைய உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக அவர்கள் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துரையாற்றினர்.
இறுதியில் தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில் ஆதரிப்பதும் ஜனநாயகம் எதிர்ப்பதும் ஜனநாயகம். ஆனால் முதுகில் குத்துவது ஜனநாயகமல்ல. எதிர்காலத்திலாவது மக்கள்பிரதிநிதிகளாக இயங்குங்கள் என்றார்.

மேலும் அவர்கூறுகையில் வரவுசெலவுத்திட்டம் இங்கு சபையில் நிறைவேற்றப்படமுன்பு ஒரு முகநூலில் சட்டவிரோதமாக பிரசுரிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக சம்மாந்துறை பொலிசில் சட்டநடவடிக்கைக்காக முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -