“தவறுகளை தொடர்ந்தும் செய்யாமல் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து பிரதமரை நியமியுங்கள்”


 – அலரி மாளிகை ஊடகவியலாளர் மாநாட்டில் ரிஷாட் -
ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

நாட்டின் முதன் மகனான ஜனாதிபதி, அரசியலமைப்பை தன் கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருக்காமல், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
அரசமைப்பில் இல்லாத அதிகாரத்தை தான் விரும்பியவாறு ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் இற்றை வரை ஜனாதிபதி பாவித்து வருகின்றார்.

19ஆவது திருத்தத்தில் “பிரதமர் ஒருவரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை” என தெளிவாக கூறப்பட்டிருந்தும் அதனையும் மீறி கடந்த ஒக்டோபர் 26இல் பிரதமர் ரணிலை பதவி நீக்கினார். அதன் பின்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார். 4 ½ வருட காலத்துக்குள் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற 19 ஆவது அரசியலமைப்பு திருத்த விதி முறைகளையும் மீறி அதனையும் கலைத்தார். தனக்கு இவ்வாறான அதிகாரம் இல்லையெனத் தெரிந்தும் இந்த செயற்பாட்டை மேற்கொண்டார்.
அவரால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் சட்ட ரீதியாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களின் சட்ட பூர்வமற்ற நடவடிக்கைகளுக்கும் துணை போனார். சட்ட விரோத அரசாங்கத்தின் செயலாளர்களது சட்ட முரணான நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி அனுமதி அளித்ததுடன் தற்போது அவர்களை அழைத்து அமைச்சின் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு இன்று (04) பணிப்புரை விடுத்துள்ளார்.
மேன் முறையீட்டு நீதிமன்றமானது நேற்று (03) பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையுத்தரவை விதித்து அதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி தனது தவறுகளை தொடர்ந்தும் செய்யாது அதனை உணர்ந்து ஜனநாயகத்துக்கு வழி விட வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -