உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸூக்கும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் நிர்வாக குழுவினருடன் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (29) சனிக்கிழமை இராஜாங்க அமைச்சரின் கல்முனை காரியாலயத்தில் இடம் பெற்றது.
மேற்படி விசேட கலந்துரையாடல் நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான எம். எச். ரிஸ்பின் அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராஹிம் மற்றும் அமைப்பின் நிருவாக செயற்குழு உறுப்பினர்களும் அமைச்சரின் சார்பாக மாநகர சபை உறுப்பினர் எம். எஸ்.எம். சத்தார் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஏ. ரினோஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் அம்சமாக அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி எம். எச். ரிஸ்பின் அவர்கள் ஹரீஸ் அவர்களுக்கு உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சு கிடைக்கப் பெற்றது தொடர்பில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பானது தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் இராஜங்கஅமைச்சர் சமகால அரசியல் மற்றும் கள நிலவரங்கள் தன்னால் முன்னெடுக்கப் பட்டு நடைபெற்று வருகின்ற அபிவிருத்தி திட்டங்களை துரிதப் படுத்தல், தனக்கு கிடைக்கப் பெற்றுள்ள அமைச்சின் மூலமாக எமது சமூகத்திற்கு தன்னால் முடியுமான பணிகளை உடன் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவித்தார் அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரஊப் ஹக்கீமின் அமைச்சின் மூலம் கல்முனைப் பிராந்தியத்தில் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய துரித அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக பின்வரும் விடயங்கள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
01. முன்னர் அமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள வாகன அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கை பெறும் காரியாலயத்தை உடன் ஏற்படுத்த வேண்டும்
02. மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் பொறிமுறைக்கான கனரக வாகனங்கள் மற்றும் கொம்பக்டர்களை உடன் அமைச்சு மூலம் வழங்குதல்
03. உயர் தொழில் நுட்பக் கல்லூரிகளின் கிளைகளை கல்முனையில் ஏற்படுத்துதல்
( SLIATE)
04. அஷ்ரப் வைத்திய சாலையின் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்
05. கல்முனை கிரீன் பீல்டு வீட்டுத்திட்டம், கல்முனை நகர மண்டபம் தொடர்பாகவும்
மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆக்க பூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றன.
அத்துடன் அமைச்சரின் சமூக அபிவிருத்தி செயற் திட்டங்கள் மற்றும் ஏனைய பிராந்திய அபிவிருத்தி செயத்திட்டங்களுக்கு கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு தனது சமூகம் சார்ந்த பங்களிப்பை வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.