வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறோம்.


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.

NFGG ஊடகப் பிரிவு-
நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்க முடியாது என 13.12.2018 இல் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.
இது குறித்து அக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உரிய காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை தான்தோன்றித் தனமாகக் கலைக்கும் ஜனாதிபதியின் அரச வர்த்தமானி அறிவித்தல் இதன் மூலம் செல்லுபடியற்றதாகியுள்ளது.
அரசியலமைப்பின் மேலாண்மையும் (Supremacy of the Constitution) சட்ட ஆட்சியும் (Rule of Law) வலுப்பெறுவதே ஜனநாயக ஆட்சியின் ஆணிவேராகும். அதை இந்தத் தீர்ப்பு மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த ஏழு நீதியரசர்களும் ஒருமித்து ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியதன் மூலம் இதன் கனதியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளனர்.
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில், பதவி வகிக்கும் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக வெளிவந்த முதலாவது தீர்ப்பு என்ற வகையிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது.
அத்தோடு மக்கள் நீதித் துறை மீதான அழுத்தங்கள் குறித்து தொடர்ச்சியாக சந்தேகம் கொண்டிருந்த நிலையில், அதன் சுயாதீனத்தை ஓங்கச் செய்துள்ளதோடு, வலு வேறாக்கத்தையும் (Seperation of Power) இந்தத் தீர்ப்பு மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அரசியல் மற்றும் ஏனைய அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, நீதித் துறையின் சுயாதீனத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அதி கூடிய கடப்பாடு இந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது.
நிறைவேற்றுத் துறையும் சட்டவாக்கத் துறையும், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து செயலாற்ற வேண்டும் எனவும், நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து உடனடியாக மீட்க வேண்டும் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மன்றாட்டமாக வேண்டிக் கொள்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -