கடும் விமர்சனங்களை நான் விரும்பி ஏற்றுக்கொள்வேன்!
சம்மாந்துறையில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர்.
காரைதீவு நிருபர் சகா-நீங்கள் பிறருக்குச் செய்கின்ற ஒவ்வொரு உதவியும் நிச்சயம் ஏதோ ஒருவடிவில் திரும்பக்கிடைக்கும்.
இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை மனிதநேய நற்பணிப்பேரவையும் ஸம்ஸம் பவுண்டேசனும் இணைந்து நடாத்திய சம்மாந்துறைப்பிரதேசத்தில் தேவையுடைய 300 தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு 9லட்சருபா பெறுமதியான கற்றலுபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அப்துல்மஜீத் மண்டபத்தில் மனிதநேய நற்பணிப்பேரவையின் ஸ்தாபகத்தலைவர் இர்ஷாட் ஏ காதர் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் பேசியபோதே மேற்கண்டாவறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
எந்தளவிற்கு விமர்சனங்கள் வருகின்றதோ அந்தளவிற்கு நாம் வேலை செய்கின்றோம் என அர்த்தம். கடும் விமர்சனங்கள் எனக்குப்பிடிக்கும். நான் அவற்றை விரும்பி ஏற்றுக்கொள்வதுண்டு.
நான் நல்ல மனிதனாய் இருக்க முயற்சிசெய்கிறேன். விடுகிறார்களில்லை.
கல்விக்கு உதவவேண்டும்..
பொதுவாக முஸ்லிம் பொது அமைப்புகள் கல்விக்கு உதவிசெய்வது குறைவு. ஆனால் மனிதநேய நற்பணிப்பேரவை ஸம்ஸம் பவுண்டேசன் அதற்கு விதிவிலக்காக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். பாராட்டுக்கள்.
பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல் காலம்வரை எம்மை நினைக்கும்வண்ணம் ஏதாவது உதவியை பிறருக்குச்செய்திடவேண்டும்.
இந்த மாணவர்கள் நிச்சயம் நாளை இதுபோன்ற உதவிகளை மற்றவருக்குச்செய்வார்கள். எனவே உங்களது உதவி என்பது வீண்போகாது. அதுவும் இனமதபேதமற்று உங்கள் சேவையிருப்பது எனக்கு மேலும் பிடித்திருக்கிறது. அதுதான் தேவை.
நான் இனமதபேதம் பார்ப்பதில்லை!
நான் இனமத பிரதேச பேதம் ஒருபோதும் பார்ப்பதுமில்லை. பேசுவதுமில்லை. என்னைப்பிடித்தவர்களுக்கு என்னைபிடியாதவர்கள் யாரென்று தெரியும். அவர்களை எண்ணிப்பார்த்தால் என்னை அறியலாம்.
ஊர் பார்த்து இனம் பார்த்து மதம் பார்த்து வஞ்சனை செய்வதில்லை. உதவியும் செய்வதில்லை. எனக்கு அனைவரும் சமம்.
உதவிசெய்தால்....ஒரு சம்பவம்!
நான் கல்முனை சாஹிறாக்கல்லூரியில் கற்பிக்கும்போது எனது வகுப்பில்உள்ள 35 மாணவர்களுள் ஒரு மாணவனுக்கு சப்பாத்து இல்லை. அவன் ஏழை மாணவன். அதற்காக சப்பாத்தை நேரடியாக வழங்கினால் ஏனைய மாணவர்மத்தியில் சற்றுவித்தியாசமாகவிருக்கும்.
அதற்காக மறுநாள் வகுப்பில் ஒரு கேள்வியைக்கேட்டேன். அதற்கு அந்த மாணவன் முதலில் விடையளித்தான். இதான் சந்தர்ப்பமெனக்கருதி அவனுக்கு நான் சப்பாத்தை பரிசாக வழங்கினேன்.அதுமுடிந்துவிட்டது.
பிறகு நான் சம்மாந்துறைக்கு வலயக்கல்விப்பணிப்பாளராக வந்தபோது அங்கு 4 இரும்பு அலுமாரி தேவைப்பட்டது. நான் கல்முனை அக்கரைப்பற்று போன்ற பல இடங்களில் விலைகேட்டேன் ஒரு அலுமாரி 14900ருபா சொன்னார்கள்.
மறுநாள் சாய்ந்தமருதுக்குச்சென்று ஒருகடையில் விலைகேட்டேன். அந்த முதலாளி எழுந்துவந்து மரியாதையுடன் ;10ஆயிரம் ருபா சேர்' என்றார். எனக்குள் சந்தேகம் அலுமாரி தரம்குறைந்ததோ என்று.
அவர் மீண்டும் கேட்டார் 'நீங்கள் மன்சூர் சேர்தானே; என்று. ஆம் என்றேன். 'நீங்கள் எனக்கு படிக்கும்போது சப்பாத்து வாங்கித்தந்தவர். நான் மறக்கவில்லை.அதற்காகவே நான் அலுமாரியைக்கொள்வனவு செய்த 10ஆயிரம் ருபாவிற்கே தருகிறேன். உங்களுக்காக அவற்றை ஏற்றியும்கொண்டுதருகிறேன்' என்றார்.
என்றோ ஒருநாள் பிரதியுபகாரம் கருதாமல் செய்த உதவி இன்று இவ்வாறு திரும்பிக்கிடைத்துள்ளது என்று எண்ணிச்சந்தோசப்பட்டேன். எனவே நாம் செய்யும் உதவிகள் நிச்சயம் திரும்பக்கிடைக்கும். என்றார்.
ஒவ்வொரு மாணவனுக்கும் தலா 3000 ருபா பெறுமதியான கற்றலுபகரணப்பொதி வழங்கப்பட்டது.பெருந்தொகையான பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.