-முன்னாள் அமைச்சர் பஷீர் காட்டம்-
எஸ்.அஷ்ரப்கான்-கடந்த காலத்தில் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் காலத்துக்கு காலமும், சம்பவத்துக்கு சம்பவமும் வெளியிட்ட பொறுப்பற்ற கருத்துகளும்கூட கடந்த மூன்று தசாப்த கால அழிவுகளுக்கு காரணமாய் அமைந்தன, இடியப்ப சிக்கல்கள் பலவற்றையும் நாடு ஒரேயடியாக எதிர்கொள்ள நேர்ந்து உள்ள நெருக்கடி மிகுந்த இக்காலத்தில் வவுணதீவு தாக்குதலை அரசியல்வாதிகள் அரசியல் இலாப கண் கொண்டு பார்க்க வேண்டாம் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன் ஊக்குவிப்புகள் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் கோரி உள்ளார்.
இவர் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று (02) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கேட்டுள்னர்.
மேலும் அவர் குறிப்பிடும் போது,
வவுணதீவு- வலையிறவு காவலரணில் வைத்து கடந்த 29 ஆம் திகதி ஒரு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரும், ஒரு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரும் காவல் கடமையில் இருந்த போது இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவத்தை பொலிஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக எடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள். இராணுவமோ,பொலிஸோ, அதிரடி படையோ, பாதுகாப்பு அமைச்சோ இக்கொலைகளை செய்தவர்கள் பற்றி தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இக்கொலையை இன்னார்தான் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேக கருத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்து விட்டார்கள்.
இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் இன்றைய அரசியல் தேவை கருதி வெளியிட்டுள்ள இக்கருத்து சரியாகவோ பிழையாகவோ இருக்கலாம். ஆனால் சரியான தாக்குதல்தாரிகள் யார்? என்பதை கண்டறிய நடத்தப்படுகிற விசாரணைகளுக்கு இக்கருத்து பாதகத்தை விளைவிக்கும். இது மட்டுமல்ல நீண்ட காலத்துக்கு பிறகு மட்டக்களப்பில் நடந்துள்ள இப்பாரதூரமான நிகழ்வால் அதிர்ச்சியுற்றிருக்கும் மட்டக்களப்பு மக்களை இக்கருத்து மேலும் அச்சத்துக்கு உள்ளாக்கி நிம்மதி இழக்க செய்து விடும்.மேலும் இவ்வாறான புதிய சம்பவங்கள் நிகழ்வதை தூண்டும் கைங்கரியத்தை செய்யும் வாய்ப்பையும் இவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்து ஏற்படுத்தவும் கூடும்.
நமது அரசியல்வாதிகள் இனத்துவ வரலாற்றில் இருந்து எதையுமே இது வரை கற்று கொள்ளவில்லை என்பது துரதிஷ்டமானது ஆகும். கடந்த காலத்தில் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் காலத்துக்கு காலமும், சம்பவத்துக்கு சம்பவமும் வெளியிட்ட பொறுப்பற்ற கருத்துக்களும்கூட கடந்த மூன்று தசாப்த கால அழிவுகளுக்கு காரணமாய் அமைந்தன என்ற பட்டறிவை கணக்கெடுக்க தவறி சொந்த கட்சி மற்றும் தனி நலன்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இக்கருத்தை இவ்விரு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.இவ்விருவரும் ஏற்கனவே பேசி கொண்டதற்கு அமைவாகவே சிங்கள எம். பி முன்னர் எழுந்து பேச, தமிழ் எம். பி அடுத்து எழுந்து வழி மொழிந்து பேசியதாக புரிந்து கொள்ளலாம்.
உச்சபட்ச அரசியல், நீதி, நிர்வாக மற்றும் பொருளாதார சிக்கல்களை சம கால இலங்கை எதிர்கொள்கிறது. பிரதமரை ஜனாதிபதி மாற்றியுள்ளதால் பாராளுமன்றம் சீர்குலைந்து உள்ளது. பாராளுமன்ற கலைப்பு நீதிமன்றத்தில் கிடக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.யாருடைய பணிப்புகளை ஏற்று செயல்படுவது? என்று நிர்வாகிகள் தடுமாறி போய் உள்ளார்கள்.பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு சரிந்து கொண்டு செல்கிறது. இவ்வாறு இருக்கையில் வவுணதீவில் நடந்த தாக்குதலை அரசியல்வாதிகள் அரசியல் இலாபக் கண் கொண்டு பார்த்து கருத்து வெளியிட கூடாது.
நாட்டில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைகின்ற வாய்ப்பு உள்ளதா? என்கிற அடிப்படையில்தான் இரு பொலிஸாரினதும் கொலையை மக்கள் பிரதிநிதிகள் நோக்க வேண்டும். இவ்வாறான தாக்குதல்கள் தொடருமானால் ஏற்கனவே அரசியல் உறுதி தன்மை சரிந்து கிடக்கிற தருணத்தில் பாதுகாப்பு தரப்பினரின் பிடி இறுகுவதற்கு வாய்ப்புள்ளதா? என்ற கோணத்தில்தான் பார்க்க வேண்டும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு எப்படியாக அமைந்தாலும் நாட்டின் இன்றைய அரசியல் நிலைமையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடாது என்று நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.இன்றைய நிலைமை தொடர்ந்தால் ஏற்கனவே தெளிவான தலைமைத்துவம் இல்லாத ஐக்கிய தேசிய கட்சியின் மீதுள்ள ரணிலின் பிடி தளர்ந்து விடலாம். இதனால் இக்கட்சி பலவீனம் அடைந்து நீண்ட காலத்துக்கு நிமிர்த்த முடியாத நிலைக்கு உள்ளாகலாம். தலைமைத்துவம் தெளிவாக உள்ள ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாட்டின் மீதான பிடி இறுகுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இப்படியாக நிலைமைகள் இருக்கின்றபோது நிகழ்ந்த வவுணதீவு கொலையை சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எவரால் செய்யப்பட்டிருந்தாலும் இது வெறும் கொலை அல்ல, திட்டமிட்ட ஒரு இராணுவ தாக்குதலாகும். நீண்ட கால கெரில்லா தாக்குதல் அனுபவம் கொண்டவர்கள் மேற்கொண்ட அமைதி தாக்குதல் ஆகும். பொலிஸார் இருவரதும் கைகள் கட்டப்பட்டு உள்ளன. கூடாரத்துக்குள் கிடந்த சிங்கள பொலிஸாரின் உடலில் 21 கத்தி குத்து காயங்கள் இருந்திருக்கின்றன.வெளியில் கதிரையில் உட்கார்ந்திருந்த தமிழ் பொலிஸாரின் கழுத்து அறுக்கப்பட்டு இருக்கிறது. மேலதிகமாக இவர்கள் மீது ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டும் இருக்கிறார்கள்.வெடி சத்தம் கேட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் வேலை செய்யும் பொலிஸார் கூறியதாக இது வரை செய்திகள் வரவில்லை. பொலிஸார் வசம் இருந்த றிவோல்வர்கள் இரண்டும் கொலையாளிகளால் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன.
வவுணதீவின் உட்கிராமங்களில் மாவீரர் நினைவை ஒட்டி செய்யப்பட்டிருந்த சோடனைகள் இரவோடிரவாக பொலிஸாரால் கிழிக்கப்பட்டதாக அறிய கிடைக்கிறது. மாவீரர் தினத்துக்கான சுவரொட்டிகளை ஒட்டிய, சோடனைகளை செய்த இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கரவெட்டி பகுதியில் இரவு வேளைகளில் சில பொலிஸார் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் பேசப்படுகிறது.
கொல்லப்பட்ட சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் தென்னிலங்கையில் காலி பிரதேசத்தை சேர்ந்தவர். இவரின் உடலில் 21 தடவைகள் கத்தியால் குத்துவதாக இருந்தால் குத்தியவருக்கு சிங்கள பொலிஸார் மீது நீண்ட கால வரலாற்று கோபமும், வெறியும் இருந்திருக்க வேண்டும் அல்லது இறந்தவரின் உடல் தெற்குக்கு கொண்டு செல்லப்பட்டதும் உடலை பார்ப்பவர்கள் கோபப்பட்டு கிளர்ந்தெழ வேண்டும் என்பது குத்தியவரின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
ஆற்றோரமாக அமைந்துள்ள இக்காவலரணை தாக்க வந்தவர்களின் காலடி தடம் ஆற்றோரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.கை விடப்பட்ட தொழு நோயாளர் வைத்தியசாலை இருந்த மாந்தீவு பக்கம் இருந்து தாக்குதல்தாரிகள் வந்திருக்க கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த இடங்களில் கண்காணிப்பு கமரா இல்லை. ஆனால் வவுணதீவு ஊருக்குள்ளால் முன் வெளிச்சம் போடப்படாத உந்துருளி ஒன்று செல்வது அப்பக்கமாக இருந்த கண்காணிப்பு கமராவில் அகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எல்லாமே கதைகள்தான். நியாயமான ஆய்வு செய்யப்பட்டு தாக்குதல்தாரிகள் கைது செய்யப்பட்டால்தான் உண்மை தெரிய வரும். அது வரை அரசியல்வாதிகள் அவர்களுக்கு அனுபவமோ, அறிவோ இல்லாத புலனாய்வு வேலையை செய்வதையும், அவற்றை அறிக்கைகளாக வெளியிடுவதையும் தவிர்த்து கொள்வது எமது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பானதாகும்.