கல்முனை மேல் நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து அஹமத் லெப்பை முஹமது கலீல் என்பவரை ஏசி அச்சுறுத்தினர் என்கிற வழக்கில் ஒரு எதிரியை கல்முனை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்தது.
வழக்கின் இரண்டாவது எதிரிக்கு எதிராக முகத் தோற்ற அளவில் சான்றுகள்முன்வைக்கப்படாததால் அவரை விடுதலை செய்வதாக நீதிவான் ஐ. என். ரிஸ்பான் உத்தரவிட்டார்.
கல்முனை பொலிஸ் நிலைய சிறுகுற்ற பிரிவு பொலிஸார் தாக்கல் செய்த இவ்வழக்கில் சிறுகுற்ற பிரிவு பொறுப்பதிகாரி முஹமது நௌபர், ஓய்வு பெற்ற அதிபர் எம்.சி. ஆதம்பாவா ஆகியோர் சாட்சியம் வழங்கினர். இந்நிலையில் வழக்காளி தரப்பு சாட்சியங்கள் நிறைவு பெற்று விட்டதாக வழக்காளி தரப்பில் ஆஜரான பொலிஸ் சார்ஜன் அப்துல் ஹை நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் எதிரி தரப்பு சாட்சியங்களை வழங்க அனுமதி தர வேண்டும் என்று எதிரி தரப்பு சட்டத்தரணி கோரினார். இதை அடுத்து எதிரி தரப்பு விளக்கத்துக்காக வழக்கை அடுத்த மாதம் 07ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
எதிரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த வழக்கு விசாரணைக்கு வந்து, திறந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய நிலையில் எதிரிகளால் ஏசி அச்சுறுத்தப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.