“மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் இணங்கவில்லை . உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம்.”
மேன்முறையீட்டு நீதிமன்றால் இன்று வழங்கப்பட்ட கட்டளையில் தமக்கு உடன்பாடு இல்லை எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச, அந்தக் கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.நாளைக் காலை முதல் பணியாக இதனை அவர் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவியில் தொடர மகிந்த ராஜபக்சவுக்கு இடைக்காலத் தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிற்பகல் கட்டளையிட்டது. அத்துடன் அவரும் அவர்சார்ந்த அமைச்சர்களும் தமது பதவிநிலைகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றக் கட்டளையடுத்து இன்று மாலை சிறப்பு அறிக்கை ஒன்றை மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார். அதிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அவர் தனது பிரத்தியேக கடிதத்தலைப்பில் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தொடக்கம் பிரதமர் அலுவலக கடிதத்தலைப்பிலேயே அறிக்கைகளை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.