கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தி உள்ளிட்ட சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் இன்று (29) சனிக்கிழமை காலை கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக்குழுத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி முக்கியஸ்தகர்கள் உள்ளிட்ட ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது உரையாற்றுகையில் கல்வித்துறை தவிர்ந்த ஏனைய அனைத்துவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளக்கூடிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் கல்முனை மாநகரம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும்வகையில் கல்முனை நகரை முன்னிலைப்படுத்தி சகல விதமான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் தமது அமைச்சின் ஊடாக கல்முனை, மட்டக்களப்பு மற்றும் கிண்ணியா நகரங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், கல்முனைத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்கமைவாக கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டம், புதிய நவீன வசதிகளுடன் கூடிய பொதுநூலகம், கல்முனை மாநகர சபையின் வருமானத்தை அதிகரிக்கும்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைத்தொகுதியினைக் கொண்ட சொப்பிங் கொம்லக்ஸ், இப்பிரதேசத்தின் மைதான மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை விரைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவற்றுக்கான சில ஆரம்ப கட்ட பணிகள் அமைச்சு மட்டத்தில் ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று கல்முனை மாநகர பிரதேசத்திலுள்ள நற்பிட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது, இஸ்லாமபாத், கல்முனை பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி தொடர்பில் இனம்கண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கமைவாக பிரதேச ரீதியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அபிவிருத்திப் பணிகள் இனங்காணப்படவுள்ளன. அத்தோடு கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக மேலும் நிதிகள் பெறப்படவுள்ளதனால் அவற்றின் ஊடாகவும் மேலும் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதுமட்டுமன்றி தலைவர் ரவூப் ஹக்கீமின் அமைச்சின் ஊடாகவும் நிதிகள் பெறப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஹரீசின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை மாநகர பிரதேசத்திற்கு தேவையான தெருமின்விளக்குகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு கல்முனை மாநகர பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான தனிப்பட்ட ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு குழு இதன்போது தெரிவு செய்யப்பட்டு அக்குழுக்கள் அவ்வபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு குறித்த அபிவிருத்தி பணியினை விரைவுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.