கல்முனையில் திண்மக்கழிவகற்றல் சேவையை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக புதிய வாகனங்கள்

அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்-
திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற பாரிய சவாலை வெற்றிகொண்டு, அச்சேவையை வினைத்திறனுடன் திருப்திகரமாக முன்னெடுக்கும் பொருட்டு புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பில் அவ்வைத்தியசாலைகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினருடன் நேற்று மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;"திண்மக்கழிவகற்றல் சேவையை எமது மாநகர சபையினால் வெற்றிகரமாக முன்னெடுப்பதில் இருந்து வருகின்ற பின்னடைவுக்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் வாகனப் பற்றாக்குறையே பிரதான காரணமாக இருக்கிறது. கடந்த பத்து, இருபது வருடங்களாக 12 பழைய வாகனங்களே இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இவை அடிக்கடி பழுதடைவதும் திருத்துவதுமாக இருக்கின்றன.

தற்போதைய சனப்பெருக்கம் மற்றும் இடநெருக்கடி காரணமாக அதிகரித்திருக்கின்ற குப்பைகளை சேகரித்து அகற்றுமளவுக்கு வாகனங்கள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றைத் தருவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. மாநகர சபையில் நிலவுகின்ற நிதி நெருக்கடி காரணமாகவே அவற்றை இன்றுவரை எம்மால் கொள்வனவு செய்ய முடியாதிருக்கிறது.
இத்தகைய வளப்பற்றாக்குறைக்கு மத்தியில் எமது மாநகர பிரதேசங்களில் இருந்து நாளாந்தம் சுமார் 70 தொன் திண்மக்கழிவுகளை எமது மாநகர சபையினால் சேகரித்து அகற்ற வேண்டியுள்ளது. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையம், முகாம்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இருந்தும் பெரும்தொகையான குப்பைகளை எவ்வித கட்டணமுமின்றி பொறுப்பேற்கின்றோம்.
தற்போது திண்மக்கழிவகற்றல் சேவைக்காக நாளொன்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபா வீதம் ஒரு வருடத்திற்கு சுமார் ஏழு கோடி இருபது இலட்சம் ரூபாவானது மாநகர சபையின் சொந்த வருமானத்தில் இருந்து செலவிடப்படுகிறது. இந்த நிதியை திரட்டுவதே பெரும் சவாலாக இருக்கிறது. மாநகர சபைக்கு சோலை வரி கட்டுவதிலும் வர்த்தக அனுமதிப்பத்திர கட்டணங்களை செலுத்துவதிலும் எமது பொது மக்களும் வர்த்தகர்களும் அசமந்தமாகவே இருந்து வருகின்றனர்.
அதேவேளை சோலை வரியினுள்தான் குப்பை வரியும் வருகிறது என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது அவ்வாறில்லை. சோலை வரி வேறு- குப்பை வரி வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

2012ஆம் ஆண்டு குப்பை வரி அறவிடலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் அது இன்னும் எமது மாநகர சபையினால் அமுல்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் தேவையான புதிய வாகனங்களை எவ்வாறு கொள்வனவு செய்வது? அதனால்தான் இவ்வளவு காலமும் அக்காரியம் நடைபெறாமல் இருந்து வருகிறது.

இதற்குத் தீர்வாக அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் திண்மக்கழிவகற்றல் சேவைக்கான குப்பை வரியை அறவீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளோம். ஒரு வீட்டுக்கு நாள் ஒன்றுக்கு பத்து ரூபா வீதமும் சாதாரண கடைகளுக்கு இருபது ரூபா வீதமும் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முப்பது ரூபா தொடக்கம் நூறு ரூபா வரையும் இக்கட்டணத்தை அறவீடு செய்ய உத்தேசித்துள்ளோம். இவ்வருமானம் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும் திண்மக்கழிவகற்றல் சேவையை இன்னும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்திற்கு பொது மக்களினதும் வர்த்தகர்களினதும் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருவதற்கு வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறையினர் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும்.
ஓர் அவசரகால நிலைமையின்போது கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பின்பற்றி எமது திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இச்சேவை கடந்த காலங்களை விட தற்போது மிகப்பெரும் சவாலாக மாறியிருக்கிறது. எதிர்காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதளவுக்கு சவால் நிறைந்த ஒரு பணியாக இது மாறப்போகிறது. அதனால் இப்போதே இப்பிரச்சினைக்கு தீர்வினைக்காண்பதற்காக, சிறந்த பொறிமுறையை உருவாக்க வேண்டியுள்ளது.

ஆளணி மற்றும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், குப்பை கொட்டுவதற்கான இடங்களை அடையாளம் கண்டு, பயன்படுத்தல் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களை கையாளுதல் என பலதரப்பட்ட அம்சங்கள் திண்மக்கழிவகற்றல் சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அடிப்படையானதும் அவசரமானதுமான தேவையாக உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு தடையாக இருப்பது நிதிப்பற்றாக்குறையே. எனவேதான் முதலில் மாநகர சபையின் சொந்த வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை, இதற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கியதாக தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம்" என்று முதல்வர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார் உட்பட வைத்தியசாலைகளின் பொறுப்பதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மாநகர சபையின் சுகாதார உத்தியோகத்தர்கள், மேற்பார்வையாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -