-அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு-
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சமூகத்தின் பலம்மிக்க ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டிய தேவையும் - பொறுப்பும் தனக்கு இருப்பதாகவும், அதற்கு தேவையான சட்டரீதியான சகல நடவடிக்கைகளையும் வெகுவிரைவில் முன்னெடுக்கவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அத்துடன், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தின் மிகுதியுள்ள 6 மாடிகளின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதாகவும் அதில் அமையவுள்ள கேட்போர் கூடம் சர்வதேசதரம் வாய்ந்ததாக அமைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு வசந்தம் தொலைக்காட்சியின் ‘தலை வாசல்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அதில் மேலும் கூறியதாவது:-
‘இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழ்கின்ற நாட்டில் தேசிய மீலாத் விழாவினை பல தசாப்த்தங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. நபி பெருமானார் (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாறு, அவர்களது வழிகாட்டிதல்கள் - போதைனைகள் போன்றவற்றை நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்கள் மத்திக்கு கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னாள் அமைச்சர் ஹலீம் அவர்களின் பங்களிப்புடன் மிகச் சிறப்பாக இயங்கி வந்தது. இதனை மேலும் முன்னேற்றகரமான திணைக்களமாக மாற்ற வேண்டிய பொறுப்பும் - தேவைப்பாடும் எமக்குள்ளது. இத்திணைக்களம் பலம்மிக்க ஒரு நிறுவனமாக இயங்க பல சட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது.
நடைமுறையில் உள்ள வக்பு சட்டம் 50 வருடங்களுக்கு மேல் உள்ளது. காலத்தின் தேவை கருதி அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதுடன், பள்ளிவாசல்களை பராமறிக்கின்ற - நிர்வகிக்கின்ற விடயங்களில் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு புதிய சட்டம் ஒழுங்குகளை உருவாக்க வேண்டியுள்ளது.
அதேபோன்று, ஹஜ் விவகாரம் தொடர்பிலும் ஒழுங்கான சட்டமொன்றை இன்னும் நாம் உருவாக்கவில்லை. அதனால் நாங்கள் சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம். கடந்த காலங்களில் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு, திணைக்களம் மற்றும் ஹஜ் கமிட்டி என்பன அது தொடர்பில் எவ்வளவு சிறப்பாக செயற்பட்டாலும் முறைப்பாடுகளும் - விமர்சணங்களும் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.
எனவே, ஹஜ் தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அதன் மூலம் அரசியலுக்கு அப்பால் வெறுமனே தனியான சுயாதீனமான ஒரு நிறுவனம் இந்த ஹஜ் விவகாரத்தை கையாளக் கூடிய வகையிலான ஏற்பாடுகளை வெகுவிரைவில் செய்யவுள்ளேன்.
இதேவேளை, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசனைகளும் - மும்மொழிவுகளும் முன்வைக்கபட்டுள்ளன. தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், எந்த திருத்தமாக இருந்தாலும் அது குர்ஆனுக்கும் - ஹதீஸ{க்கும் உட்பட்ட வகையில் மாத்திரம் தான் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று ஒரு நாடு, நிறுவனங்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றது என்பதற்காக அந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சருக்கோ, திணைக்களத்துக்கோ அல்லது வேறு யாருக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது.
ஆகவே, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இஸ்லாமிய தஹ்வா அமைப்புக்கள், நிறுவனங்களின் ஒத்துழைப்போடு குர்ஆனுக்கும் - ஹதீஸ{க்கும் உட்பட்ட வகையில் திருத்தங்களை மேற்கொள்வது பற்றி யோசிப்போம். அதற்கு மாற்றமான எந்த திருத்தங்களை மேற்கொள்வதற்கும் முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை.
நாட்டில் முஸ்லிம்களைப் பற்றி தவறான அபிப்பிராயங்கள் ஏனைய சமூகங்கள் மத்தியில் உள்ளன. அதற்கு பதில் அளிக்கும் வகையிலும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் ஒரு அமைப்பு முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அந்த பிரிவு முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையிலே புரிந்துணர்வை ஏற்படுத்தல், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன், முஸ்லிம்களுக்கு தேசிய ரீதியில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. காணிப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, சமூக ரீதியான பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் இப்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமது சொந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியாதளவு முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினை உள்ளதுடன், வடக்கு கிழக்கில் யுத்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் இதுவரை தீர்வு காணப்படாத பிரச்சினையாகும்.
இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தனியான செயலணி ஒன்றினை உருவாக்கி அந்த செயலணி பிரச்சினைகளை மாத்திரம் அடையாளம் கண்டு அந்த பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட தலைமைத்துவங்களோடு, அதிகாரிகளோடு பேசி சுமுகமன முறையில் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவுள்ளோம். தேவைப்படின் குறித்த பிரச்சினைகள் அரச உயர் மட்டம் வரை கொண்டு சென்று நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வழிசெய்வோம்.
பள்ளிவாசல்களில் கடமை புரிகின்ற இமாம்கள், கதீப்மார்கள், அறபுக் கல்லூரிகளில் பணிபுரிகின்ற விரிவுரையாளர்களுக்கான ஒரு ஒழுங்குமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை. பள்ளிவாசல்களில் இமாம்கள், கதீப்மார்களை நியமித்தல் - நீக்குதல், அவர்களுக்கான அடிப்படை சம்பளம், ஓய்வூதியம் போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமொன்று இதுவரை இல்லை. ஆகவே, அதற்கான சட்டமூலங்களை விரைவாக கொண்டுவந்து முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களம் ஊடாக வக்பு சபை இதனை செயற்படுத்தும்.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட 350க்கும் மேற்பட்ட அறபுக் கல்லூரிகள் இருக்கின்றன. மௌலவிமார்களை உருவாக்குகின்ற இந்த அறபுக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் தமக்கென தனித்தனி பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன. எனவே, அறபுக் கல்லூரிகளுக்கு பொதுவான பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, அல் - ஆலீம் பொதுப் பரீட்சை தவிர்ந்த அறபுக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்ற மௌலவிமார்களுக்கு வேறு எந்த பொதுப் பரீட்சைகளும் கிடையாது. இதனால் மௌலவிமார்களின் சான்றிதழ்களின் தராதரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எவ்வாறு க.போ.த. சாதாரண தர, உயர்தர மற்றும் அல் - ஆலிம் பரீட்சைகள் நடத்தப்படுகின்றதோ அதே போன்று அரசாங்க பரீட்சைத் திணைக்களம் ஒவ்வொரு வருடமும் அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு பொதுப் பரீட்சையொன்றை நடத்தி அவர்களது சான்றிதழ்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன்.
தற்போது முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடம் 9 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று மாடிகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மிகுதியுள்ள 6 மாடிகளையும் விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அரசாங்க நிதி ஒத்துழைப்போடு அல்லது வெளிநாட்டு நிதி பங்களிப்போடு அதனை முன்னெடுக்கவுள்ளேன்.
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஸ்லிம்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தளமாக இயங்க வேண்டும். குறிப்பாக இமாம்கள், கதீப்மார்கள், அறபுக்கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பயிற்சியளிக்கின்ற பயிற்சி நிலையமொன்றை அதில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.’ - என்றார்.