தனது சுமார் 40 வருட கால ஆசிரியர் சேவையில், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 23 வருடங்கள் சேவையாற்றி, இறுதியாக கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்து, பாடசாலை சமூகத்தால் பாடசாலையின் வரலாற்றில் ஓர் அபிவிருத்தி ஜாம்பவான் என்று அழைக்கப்படும் கல்முனை சாஹிராக் கல்லூரியின் அதிபர் எம்.எஸ். முஹம்மத் கடந்த 5ஆம் திகதி தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆரம்பக் கல்வியை(1-5) சாய்ந்தமருது அல் - கமரூன் வித்தியாலயத்திலும், தரம் 6 இடைநிலைக் கல்வியை தற்போது மஹ்மூத் மகளிர் கல்லூரி காணப்படும் இடத்தில் அமைந்திருந்த அல் - அமான் பாடசாலையிலும் 7ஆம் ஆண்டு தொடக்கம் உயர் கல்வி வரை கல்முனை சாஹிராக் கல்லூரியிலும் கற்ற இவர், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து கலைமானிப் பட்டத்தைப் பெற்றார்.
1978 இல் சாய்ந்தமருது மல்ஹருல் ஸம்ஸ் வித்தியாலயத்துக்கு ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். அங்கே தனது சேவையினை சிறப்பாகச் செய்தார். பின்னர் 1995.01.01 இல் கல்முனை சாஹிராக் கல்லூரிக்கு மாற்றம் பெற்று, சுமார் 23 வருடங்கள் ஆசிரியராக சேவைபுரிந்தார்.
பிரதிப்பகுதித்தலைவராகவும், பகுதித்தலைவராகவும், க.பொ.த. சாதாரண பிரிவில் சிறந்த முறையில் கடமையாற்றி, மாணவர்களின் உயர்வுக்கு வழிசமைத்தார்.
இவர், எதற்கும் அஞ்சாது, துணிவோடு முகம் கொடுத்து, ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி, குவிந்து காணப்பட்ட அதிகாரங்களைப் பரவலாக்கி, அதிபர்களையும், பகுதித்தலைவர்களையும் சுதந்திரமாகச் செயற்பட வைத்தார்.
சிற்றூழியர் முதல் கல்வி அதிகாரிகள் வரை அதிபர் முஹம்மத், எல்லோருடனும் இன்முகத்துடன் பழகக்கூடிய ஒருவர். இதன் காரணமாக கல்லூரி வேகமாக வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
பல வருடங்களாக குப்பை மேடுகளாக காட்சியளித்த பாடசாலையின் பல பகுதிகள் பாரிய சிரமதானங்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டன.
இவர் பாடசாலையை பொறுப்பேற்கும் போது கல்லூரியின் பள்ளிவாசலின் முற்றம் குப்பை தொட்டியாக காணப்பட்டது. அது கடும் சிரமத்தின் மத்தியில் துப்பரவு செய்யப்பட்டு, வுழு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து, மீள 5 நேரமும் தொழுகை நடத்த இவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது, பாடசாலையின் பெரும்பாலான பகுதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டன, பைசிக்கள் செட் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது, விளம்பரப்பலகை நிர்மாணிக்கப்பட்டு, மாணவர்களின் அடைவுகள், பாடசாலையின் அடைவுகள் காட்சிப்படுத்தப்பட்டன, பாடசாலையைச் சுற்றி கொங்கிரீட் பாதை அமைக்கப்பட்டு, போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டது, அதிபர்கள், ஆசிரியர்களின் விடுதிக் கட்டிடங்கள் பேண்தகு அபிவிருத்தி மூலம் நிர்மாணிக்கப்பட்டன.
மாணவர் விடுதிக் கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு, நவீனமயப்படுத்தப்பட்டன, மழை பெய்தால் பாடசாலை நடத்த முடியாமல் வெள்ளக் காடாக காட்சியளிக்கும் கல்லூரியை முன்னாள் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியாலும் அதிபர் முஹம்மதின் வழிகாட்டலாலும் 2ஆம் கட்ட அபிவிருத்தி செய்யப்பட்டு, கல்லூரி மைதானம் சீரமைக்கப்பட்டது, கல்லூரி மாணவர்களின் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெப்தளத்தில் வெளியிடப்பட்டன. இது இலங்கையின் பாடசாலை வரலாற்றில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட பணியாகும்.
தரம் 6-11 வரையுள்ள பெரும்பாலான வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, கற்றல் கற்பித்தலுக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டது, சீசீரீவீ கமரா, கைவிரல் அடையாளம் போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன, ஆஸாத் ஹாஜியாரின் நன்கொடையால் காலை ஆராதனைச் சதுக்கம் நிர்மாணிக்கப்பட்டது, மைதானத்தின் கிரிக்கட் உள்ளக பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது, புதிய மலசல கூடங்கள் உருவாக்கப்பட்டதுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது, ஸ்மார்ட் வகுப்புகள் அதாவது 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் புதிய வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு, நவீன முறையில் ஆசிரியர்கள் கற்பித்தலை மேற்கொள்ள வழிசெய்யப்பட்டது.
விசேட தேவையுடையவர்கள் மற்றும் பின்னடைவான மாணவர்களின் நலன்கருதி விசேட கல்விப் பிரிவு திறக்கப்பட்டு, நவீனமுறையில் வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டன, கல்லூரியின் விஞ்ஞானப்பிரிவில் புதிய நூலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது, அதிபர் காரியாலயம் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள் புதிய வடிவம் பெற்றதுடன் நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டது, கல்லூரியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது, கல்லூரி அழகிய பல்கலைக்கழகத்தின் வடிவத்தைப் பெற அழகிய மரங்கள் நடப்பட்டன.
கல்லூரியின் முக்கிய தேவைகளுள் ஒன்றான நிர்வாகக் கட்டிடம் ஒன்று வெகுவிரைவில் என்எஸ்பீஎஸ் திட்டத்தின் கீழ் கிடைப்பதற்கான சகல ஆரம்ப வேலைகளும் முடிவுற்ற நிலையில் உள்ளன.
இவ்வாறு கல்லூரியின் முழுத்தோற்றமுமே அதிபர் முஹம்மதின் காலத்தில் மாற்றியமைக்கப்பட்டது. அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சிற்றூழியர்கள் நலன்விரும்பிகள் அனைவரினதும் உழைப்பும் வியர்வையும் கல்லூரி முன்னேற்றங்களின் பின்னாலுள்ளன.
2017 உயர்தர முடிவுகளின்படி விஞ்ஞானப்பிரிவில் 62சதவீதமும், வர்த்தகப் பிரிவில் 56 சதவீதமும், கலைப்பிரிவில் 42 சதவீதமும், தொழில்நுட்பப் பிரிவில் 56 சதவீதமுமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இப்பாடசாலைக்கு புகழை ஈட்டித்தந்துள்ளனர்.
க.பொ.த.சாதரண தரப் பரீட்சை முடிவுகளிலும் கல்லூரி சிறந்து விளங்குகின்றது. 2016 இல் 9 ஏ சித்தியில் இருந்து 2017 இல் 13 - 9 ஏ சித்தியாக வளர்ச்சி கண்டது. இது சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் 85 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கணித பாடத்தில் சித்திபெறத் தவறுகின்ற மாணவர்களின் கற்றல் அபிவிருத்திக்காக இரவு பகலாக தரம் 11 பகுதித்தலைவர் ஏ.எச்.எம். நிசாரும் ஆசிரியர்களும் அயராது உழைத்து வந்தனர். கலை வர்த்தக மாணவர்களின் முயற்சியினால் வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசி இப்பகுதி புதிய வடிவம் பெற்றுள்ளது.
மேலும் இணைப்பாட விதானங்களிலும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் பதக்கங்கள் பெற்று பாடசாலைக்கு புகழை ஈட்டித் தந்துள்ளனர். இது அதிபர் முஹம்மதின் காலத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டது.
அண்மையில் நடந்த சுனாமி ட்ரில் கல்முனை சாஹிரா, கட்டொழுங்குக்கு மிகச் சிந்த உதாரணமாகத் திகழ்கின்றது.
பாடசாலையையும் சமூகத்தையும் இணைப்பதில் அதிபர் முஹம்மட் வெற்றி கண்டார். சமுதாயத்தின் புத்தி ஜீவிகளை சாஹிரா நடைபவனி, ஹொஸ்டல் தினம், கலர்ஸ் நைட் போன்ற உணர்வுபூர்வ வேலைத்திட்டங்கள் மூலம் அவர்களை இணைத்து கல்வியையும் பௌதீக அபிவிருத்தியையும் வளர்ச்சி பெற தன்னலம் கருதாது பாடுபட்டார்.
கல்லூரியின் பழைய மாணவர்குழாம், அபிவிருத்திக்குழு என்பன எப்பொழுதும் இவரைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருந்தன. எம்.ஐ. முஸ்தாக், ஏ.பி. ஜௌபர் ஹாஜி, ஏ. இஸ்ஸதீன் போன்ற முன்னணி சமூக சேவையாளர்கள், அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் பாடசாலையின் அபிவிருத்திக்காக பாரிய உதவிகளைச் செய்துள்ளனர்.
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் கல்முனைக்குடியை வதிவிடமாகவும் கொண்ட இவர், ஏ.ஆர். மீராசாஹிபு - எம்.எம். பரீதா உம்மா தம்பதிகளின் புதல்வராவார்.
இவர், ஏ.ஆதிகா (ஆசிரியை) என்பவரைக் கரம்பிடித்து, இவர்களுக்கு எஸ்.எம்.எம். அய்மன்(பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீடம்), எஸ்.எம்.சபூரியத்சேபா, எஸ்.எம்.எம். அமர் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.
இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி, அதிபர் தரம் 2 இற்கு சித்திபெற்று, 2009ஆம் ஆண்டு முதல் கல்முனை சாஹிராவின் பிரதி அதிபராக 2017.04.03 வரை பணியாற்றிய இவர், 2017.04.04இல் கல்முனை சாஹிராவின் அதிபராகக் கடமையேற்று, பாடசாலைச் சமூகம் மற்றும் கல்விச் சமூகம் போற்றும் வகையில் தம்பணியை சிறப்பாகச் செய்து, 2018.11.05 இல் பூரண திருப்தியுடன் ஓய்வு பெற்றார்.