நான்காவது தொடர்.........................
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-
விமர்சிப்பது யாரை ? பாதிக்கப்பட்ட உலக இஸ்லாமியர்களை கண்டுகொள்ளாத சவூதி அரேபியா.
இஸ்லாமியர்களின் மூன்று புனித ஸ்தலங்களில் இரண்டு சவூதி அரேபியாவிலேயே உள்ளது. இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி அவர்கள் பிறந்ததும், வாழ்ந்ததும், மறைந்ததும், அல் குரான் வஹீ மூலமாக இறங்கியதும் அங்குதான்.
உலகின் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இயக்க வேறுபாடுகளுக்கப்பால் இந்த நாட்டிலுள்ள கஹ்பாவை நோக்கித்தான் தொழுவார்கள்.
இதனால் உலகில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பார்வையும், பற்றுதலும் சவூதி அரேபியா மீது உள்ளதே தவிர, அது ஆட்சியாளர்கள் மீது அல்ல.
இங்கே எழுத்தாளர் ஜமால் அவர்கள் கொல்லப்பட்டதற்கான விமர்சனமானது ஆட்சியாளர்களை நோக்கியதே தவிர, புனிதமாக நேசிக்கின்ற சவூதி அரேபியாவை நோக்கியதல்ல.
தனது தாய்நாட்டின் மீது இல்லாத பற்றுதல் சவூதி அரேபியா மீது உள்ளது. தனது வாழ்நாளில் என்றோ ஒரு நாள் எப்படியாவது இறுதிக் கடமையை செய்வதற்கு அந்த நாட்டுக்கு செல்லவேண்டும் என்றே உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியனும் விரும்புவான்.
மொத்தத்தில் உலக இஸ்லாமியர்களை தலைமை தாங்கும் தகுதி சவூதியிடமே உள்ளது. ஆனால் அதன் ஆட்சியாளர்கள் உலகில் அடக்கப்பட்டும் மற்றும் வறுமையிலும் வாழ்கின்ற இஸ்லாமியர்களை கண்டுகொள்வதில்லை.
ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் உணவு இன்றி பட்டினியால் எத்தனையோ இலட்சம் இஸ்லாமியர்கள் வாழ்கின்றார்கள்.
அதுபோல் உலகின் பல நாடுகளில் ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கும், கொடுங்கோல் ஆட்சியினாலும் பல இலட்சம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டும், அகதிகளாக்கப்பட்டும் உள்ளார்கள். ஆனால் இவைகளை இந்த சவூதி ஆட்சியாளர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டும், அகதிகளாக நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டபோதும் அவர்களுக்காக சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக துருக்கிதான் துணிச்சலாக குரல் கொடுத்தது. துருக்கிய அதிபர் எடோகான் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த பிரச்சினையை கொண்டுசென்றது மட்டுமல்லாது, மியன்மார் அரசாங்கத்தை நேரடியாக எச்சரித்தார். அதன்பின்புதான் மியன்மார் அரசு சற்று தனது போக்கை தளர்த்தியது.
ரோஹிங்கிய முஸ்லிம்கள் விடயத்தில் துருக்கி தலையிடாது இருந்திருந்தால், இன்று வரைக்கும் அவர்கள் முற்றாக மியன்மாரைவிட்டு துடைத்தெறியப்பட்டு நாடற்றவர்களாக ஆகியிருப்பார்கள்.
அதிகூடிய ஆடம்பர வாழ்க்கையையும், வீண் விரயங்களும் மேற்கொள்ளும் சவூதி ஆட்சியாளர்கள் உலக முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டதில்லை.
தொடரும்..........................