பிரதி அமைச்சர் ஹரீஸினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மருதமுனை பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி ஆரம்பிப்பதற்கு ஏதுவாக குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (17) புதன்கிழமை மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ். உமர் அலி, எம்.எஸ்.எம். நவாஸ், மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம். முஸ்தபா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி அன்சார் மௌலானா, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா மற்றும் மருதமுனை பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரசின் கம்பெரலிய நிகழ்சித்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பிரதி அமைச்சர் ஹரீஸினால் மருதமுனை பிரதேசத்திலுள்ள 12 பள்ளிவாசல்களின் புனரமைப்பு பணிக்காக ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் ஆகக் குறைந்தது 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் மருதமுனை பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல், மக்பூலியா ஜூம்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுல் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல், மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசல், மருதமுனை மத்திய பள்ளிவாசல், அந் நஹ்லா அரபிக் கல்லூரி, அல் மினன் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் நூராணியா பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசல், பாகியதுல் சாலிஹா பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல், மஸ்ஜிதுல் றஹ்மத் பள்ளிவாசல் ஆகியவற்றிக்கான புனரமைப்பு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு பூரணப்படுத்தப்படவுள்ளது.





