சாய்ந்தமருதின் சமூக, கலாசார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் றஸ்ஸாக் மௌலவி; ஷூரா கவுன்சில் அனுதாபம்


அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது பிரதேசத்தின் சமூக, கலாசார, ஆன்மீக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் அப்துர் றஸ்ஸாக் அவர்களின் மறைவு பேரிழப்பாகும் என சாய்ந்தமருது ஷூரா கவுன்சில் தெரிவித்துள்ளது.

அஷ்ஷெய்க் அப்துர் றஸ்ஸாக் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (02) தனது 82 ஆவது வயதில் காலமானார். அவரது ஜனாஸா பெரும்திரளான மக்கள் முன்னிலையில் சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவு குறித்து சாய்ந்தமருது ஷூரா கவுன்சில் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

"சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரபல்யம் பெற்ற புலவர் ஆலிம் எனும் ஆதம்லெவ்வை மௌலவியின் புதல்வரான றஸ்ஸாக் மௌலவி அவர்கள், கல்முனை ஸாஹிராக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளில் இஸ்லாம் பாட ஆசிரியராக கடமையாற்றி, மாணவர்களை பரீட்சைக்கு மாத்திரம் தயார்படுத்துவதோடு மாத்திரம் நின்றுவிடாது, அவர்களுக்கு மார்க்க போதனைகளை சிறப்பாக நடாத்தி, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்துவதிலும் ஆன்மீக ரீதியில் பலமடைய செய்வதிலும் கூடிய கவனம் செலுத்தி வந்துள்ளார்.
அதேவேளை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் 1975 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் முப்பது வருட காலம் வாராந்த குத்பா பிரசங்கத்தை மிகவும் சிறப்பாக நிகழ்த்தி வந்துள்ளதுடன் அப்பள்ளிவாசலில் பிரதம இமாமாகவும் கடமையாற்றியுள்ளார். றமழான் நோன்பு காலங்களில் பெண்களுக்கான ஹதீஸ் மஜிலிஸ்களில் பங்கேற்று மார்க்க சொற்பொழிவுகளை நடாத்தி பெண்களின் மார்க்க அறிவை வளர்ப்பதிலும் அவர்களை வணக்கங்களில் ஈடுபடுத்துவதிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

அத்துடன் 2007-2008 காலப்பகுதியில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகவும் நீண்ட காலம் இப்பிரதேச உலமா சபைத் தலைவராகவும் பொறுப்புகளை சுமந்து, தமது கடமைகளை இறை திருப்தியுடன் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். இதன்போது பள்ளிவாசல் கட்டிட நிர்மாணத்தை துரிதப்படுதமாக முன்னெடுப்பதிலும் பெரும் பங்காற்றியுள்ளார். மேலும், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய ஹிப்ளுல் குர்ஆன் கலாபீடத்தை ஸ்தாபிப்பதில் முன்னின்று உழைத்து அதன் ஸ்தாபக தலைவராகவும் இருந்து அதன் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்.
எல்லோருடனும் புன்சிரிப்புடன் மிக அன்பாக கதைத்து, பழகும் நற்குணம் நிறைந்த ரஸ்ஸாக் மௌலவி அவர்கள், குத்பா பிரசங்கம் மற்றும் சொற்பொழிவுகளின்போது சத்திய மார்க்கத்தை போதிப்பதிலும் சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தி இறுக்கமான கருத்துக்களை முன்வைப்பதிலும் ஒருபோதும் எவருக்கும் அஞ்சியது கிடையாது.

இவ்வாறு சாய்ந்தமருது பிரதேசத்தின் சமூக, கலாசார, ஆன்மீக வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றிய அப்துர் ரஸ்ஸாக் மௌலவி அவர்களை ஏனைய உலமாக்களும் சமூகப் பெரியார்களும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அத்துடன் அன்னாரது மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காகவும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கம் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்" என ஷூரா கவுன்சில் தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -