களுவாஞ்சிக்குடி மக்கள் வங்கி கிளையின் மண்டூர் சேவை நிலையத்திற்கு அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (19) வெள்ளிக்கிழமை திடீர்விஜயம் செய்து அச்சேவை நிலையத்தின் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாக மக்கள் வங்கி காணப்படுகின்றது. அந்தவகையில் இவ்விஜயத்தின்போது குறித்த மக்கள் வங்கி சேவை நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் அச்சேவை நிலையத்தின் குறைபாடுகள் தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் வினவியபோது அந்நிலையத்தில் பணம் பெறும் 'தானியங்கி டெலர் இயந்திரம் (ஏ.ரி.எம்.)' இன்மையினால் பணத்தை பெற்றுக்கொள்வதில் பிரதேச வாசிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகுவதனால் அவ்வியந்திரத்திற்கான கோரிக்கை பொதுமக்களிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த இயந்திரத்தை அச்சேவைநிலையத்தில் பொருத்துவதற்கான நடவடிக்கையினை மக்கள் வங்கி தலைவருடன் தொடர்புகொண்டு மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது வாக்குறுதியளித்தார்.