போலி முகவர் நிலையங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்


மினுவாங்கொடை நிருபர்-
நாடு முழுவதும் இயங்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தொடர்பில், 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எவ்வித சுற்றிவளைப்புக்களும் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே, வெகுவிரைவில் போலி முகவர் நிலையங்களுக்கு எதிராக கடும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுமென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், 16 வயதுக்குக் குறைந்த கிண்ணியாவைச் சேர்ந்த சிறுமியைப் பணிப்பெண்ணாக அனுப்பிய இரண்டு இலங்கைப் பெண்களையும், கைது செய்வதற்கு, துபாய் மற்றும் ஓமானிலுள்ள இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று முன் தினம் (12) குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள சிறுமி அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், பக்கச்சார்புடனேயே செயற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, வெளிநாடு செல்வோருக்காக நடைமுறையிலிருக்கும் குடும்பப் பின்னணி அறிக்கையின் காரணமாகவே, பல மோசடிகள் இடம்பெற்று வருவதனால், அதனை இரத்துச் செய்யாமல் அதில் சில மாற்றங்களை மட்டும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவை, எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து, இது தொடர்பிலான காரணங்களை முன்வைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சட்ட விரோதமாக வெளிநாடு செல்வோருக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பில், பாராளுமன்றத்தில் கலந்துரையாடவிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு நேற்று முன் தினம் திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கிருந்த ஊழியர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்ததன் பின்னர், ஊடகவியலாளர்களுடன் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்தார்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையையுடைய தாய், எந்தவொரு தொழில் நிமித்தமும் வெளிநாடு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வோருக்கு வழங்கப்படும் குடும்பப் பின்னணி அறிக்கையில் இடம்பெற்று வரும் மோசடி காரணமாகவே, இன்று நாம் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
குடும்பப் பின்னணி அறிக்கையிலிருந்து தப்புவதற்காக, இன்று பலர் சுற்றுலா வீசாவில் சென்று தொழில் செய்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத நிலையில், அவர்கள் சுகயீனமடைந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாலோ, எம்மால் அவர்களுக்கு உதவ முடியாமலுள்ளது. இப் பணியகத்தில் பதிவு செய்யப்படாமல் சென்று உயிரிழப்போர் அல்லது வெளிநாடொன்றில் மரணித்தால், அவர்களது சடலத்தைக்கூட எம்மால் நாட்டுக்குக் கொண்டு வரமுடியாத இக்கட்டான நிலைமை உருவாகியுள்ளது.
"இலங்கைப் பணிப்பெண்கள், 300 அமெரிக்க டொலர் பணத்துக்காக வேறு நாடுகளுக்குப் பணிப்பெண்ணாகச் செல்வதில், எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை. இந்த மனநிலையை, பாடசாலைக் காலத்திலிருந்தே மாற்ற வேண்டும். மாறாக, இஸ்ரேல், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட பராமரிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகவே, அமைச்சின் கீழ் நாம் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.
வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவர்கள், தமது தேவைகளை நிறைவு செய்வதற்காக, பல இடங்களுக்கு அலைந்து திரிய வேண்டியிருப்பதனால், வேலைகளை இலகுவாக்கும் பொருட்டு அனைத்து செயன்முறைகளையும் தொழில்நுட்ப அடிப்படையில் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், வருடாந்தம் அதிக அந்நிய செலாவணியை நாட்டுக்குப் பெற்றுத் தரும் ஒரு இடமாக இருக்கின்றபோதிலும், இதன் செயற்பாடுகள் ஒழுங்கின்றி முன்னெடுக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். அதிகாரிகளை பல தடவைகள் எச்சரித்தும் கூட, இதன் செயற்பாடுகள் இதுவரை மாற்றியமைக்கப்படவில்லை.
எனவேதான், இன்று எவ்வித முன்னறிவித்தலுமின்றி நான் பணியகத்துக்கு திடீர் மேற்பார்வை விஜயமொன்றை முன்னெடுத்தேன். அமைச்சின் தீர்மானத்துக்கு இணங்க செயற்படாதவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, கிண்ணியா சிறுமியை பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு அனுப்பியமை, 'ஆட்கடத்தல்' என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
16 வயதுகூட நிரம்பாத இந்தச் சிறுமியைப் பணிப்பெண்ணாக அனுப்பியது சட்டவிரோதமான செயல். இந்த இரண்டு பெண்களே இச் சிறுமியை அனுப்பியுள்ளனர். இச் செயல் முற்று முழுதாக ஒரு ஆட்கடத்தல் சம்பவமாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொழில் விசா இன்றி சாதாரண சுற்றுலா விசாவில், துபாய்க்குச் சென்ற சிறுமியை துபாயிலுள்ள பெண், வாகனமொன்றின் மூலம் ஓமானுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள மற்றுபொரு மொரு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -