நூல் :- முகநூலில் நான்
நூலாசிரியர் :- டாக்டர் நாகூர் ஆரிப்
வெளியீடு :- பிறைட் பியுச்சர் பௌண்டேஷன், சாய்ந்தமருது
விலை : 300/-
தொடர்புகள் :- 0775000660
முகநூலில் நான்
முகநூல் இன்றைய எழுத்தாளர்களுக்கு தீனிபோடுகிறது என்று கூறும் அளவுக்கு முகநூலில் புதைந்திருப்போர் அதிகம். அந்த வகையில் கடந்த வாரத்தில் முகநூலில் நான் எனும் நூல் ஒன்றை பிரசவித்திருக்கிறார் முகநூல் வழியாக நன்கு அறியப்பட்ட மருத்துவத்துறையில் தன்னை நிலைநிறுத்தி ஆய்வுப் பணி, எழுத்துப்பணி, இலக்கியப் பணி, சமூகப்பணி என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்ற டாக்டர் நாகூர் ஆரிப் அவர்கள். உண்மையில் பாராட்டத்தக்க விடயமிது. ஏனெனில் பலரும் குறிப்புக்களோடு நின்றுவிடுகின்ற முகநூலை முழுமையாக நுகர்ந்து அதனை நூலாக்கியுள்ளவர்களில் முக்கியமானவர், முக்கியமானதும் காலத்தின் தேவை உணர்ந்தும் வெளியீடு செய்திருக்கின்றமை பாராட்டத்தகதாகும்.
இன்நூலுக்கு தென்கிழக்குப் பேராசான் றமீஸ் அப்துல்லா அவர்கள் பயனுள்ள முகநூலின் விலாசம் எனும் தலைப்பில் ஆசியுரை ஒன்றை வழங்கியிருக்கின்றார். 'சமூக ஊடகங்கள் பற்றிய அபிப்பிராயம் இன்று பல்வேறு வழிகளில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. அதனைக் காத்திரமாகப் பயன்படுத்துவதில் பலர் தவறி விடுகின்றார்கள். ஆனால் டாக்டர் நாகூர் ஆரிப் இந்தச் சாதனத்தை மிகப் பயனுள்ளதாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் மகிழ்ச்சியானன விடயம்.' என்கிறார் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரான எம்.வை. சலீம் அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில் 'டாக்டர் ஆரிப் அவர்களின் இவ்வெழுத்துலக செயற்பாடுகளை நோக்குகின்றபோது சமூக உணர்வுகளைத் தனக்குள் இருக்கும் வாசிப்பு உத்திகளால் வெளிக்கொண்டு வர முனைகின்றார். முகநூலில் அரசியல் சமூக விழிப்புணர்வூட்டும் பெறுமானம் மிகுந்த ஆரோக்கியமுள்ள கருத்தியல்களை பதிவேற்றம் செய்து வருவது சிறப்புக்குரியதாகும். இன்றைக்கு ஒவ்வொரு மனிதனின் பார்வையும் ஊடகங்களின் பக்கம் நிறைந்திருக்கின்றன. இந்த வகையில் முகநூலில் நான் என்கிற மகுடத்தோடு இந்த படைப்பு ஆவணப்பதிவாகியிருக்கிறது. இதுவாசிப்பின் ஊடான தேடலை சாத்தியமாக்கியிருக்கிறது' என்கிறார் ஆணையாளர் சலீம்.
'எல்லோருக்குள்ளும் எழுத்துலகம் இருக்கிறது. அதனை முகநூல் ஊடாக வெளிப்படுத்தியவர்களில் முதன்மையாளர் டாக்டர் ஆரிப்..' என்கிற தலைப்பில் என்னாலும் ஒரு அணிந்துரை வழங்கியிருந்தேன். அதில் 'நவீன தொழிற்நுட்பத்தின் எழுத்தாளுகை உலகம்;;; முகநூல் எனலாம். அது பலரை வாழ்த்தியிருக்கிறது. பலரை வாழவும் செய்திருக்கிறது. பலரை வீழ்த்தியும் இருக்கிறது. ஆனால் சிலரை படைக்கச் செய்திருக்கிறது. அந்தவகையில் இந்நூலாசிரியரான வைத்தியக் கலாநிதி ஆரிப் அவர்கள் முகநூல் வழியாக வாழ்ந்தும், வாழ்த்தும் பெற்றிருக்கிறார். தன்னுடைய ஆக்கங்களை படைப்பாக்கியும் இருக்கிறார்' என்றும்,
'எல்லோரும் எழுதுகிறார்கள், எல்லோரும் படைக்கிறார்கள் என்பதற்காக படைக்காது வித்தியாசமான கோணத்தில், யாரும் எதிர்பாராத பல விடயங்களை உட்செலுத்தி இலக்கிய உலகில் தவழவிட்டிருக்கும் இந்நூலாசிரியரின் இம்முயற்சியினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தான் வாழும் சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்பவனே உண்மையான சமூகத் தொண்டன் என்று அண்ணல் காந்திஜீ அவர்கள் கூறியிருப்பதுபோல இந்நூலாசிரியர், இறைவனது சிருஷ்டிகளில் உயர்ந்த படைப்பான மனிதர்களுக்கு தொண்டு செய்கின்ற மருத்துவர். அத்துறையோடு மாத்திரம் நின்றுவிடாது நல்ல பல கருத்துக்களை தொடர்ச்சியாக முகநூல் மாத்திரமன்றி பத்திரிகைகள் ஊடாகவும், துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் தன்னுடைய சேவைகளை ஆற்றிவருகின்றார். அதன் சாட்சியத்தைக் கட்டியம் கூறும் வகையில் இந்நூல் சிறப்பான இடத்தை வகிக்கும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. எனவே, இதுவும் ஒருவகையில் மனித உளத்தை ஆற்றுப்படுத்தும் தொண்டு' எனவும் இந்நூலின் வழியாக எனது அணிந்துரை நீண்டு செல்கிறது.
டாக்டர் நாகூர் ஆரிப் அவர்கள் இவன் வரிகள் முகவரியாய் எனும் தலைப்பில் இவ்வாறு கூறுகின்றார். அதாவது, 'என்னுடைய இந்த எழுத்துத் தாகத்திற்கு சாந்தி கொடுக்கும்; முக்கியமானதொரு ஊடகமாக முகநூல் சமூக வலைத்தலைத்தளம் இருக்கிறது. யாருடைய சிபாரிசும் இல்லாமல் எவருடைய தயவும் இல்லாமல் சுதந்திரமான முறையில் தமது எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு நிச்சயமாக முகநூல் துணை புரிகிறது. அந்த முயற்சியின் கடந்தாண்டுகளில் முகநூலில் வடித்த சிலவற்றை பலதரப்பட்ட கருத்துக்களை எனது ஆக்கங்களை நூலுருவில் கொண்டுவந்திருக்கின்றேன்' என்கிறார் நூலாசிரியரான டாக்டர் நாகூர் ஆரிப் அவர்கள்.
145 பக்கங்களைக்கொண்டுள்ள இந்நூலின் வழியாக தனது மருத்துவத்துறை சார்ந்த பல்வேறு விடயங்களை சமூகத்திற்கு கூறவிளைகின்றார். குறிப்பாக டெங்கு நோய் சம்பந்தமான பல்வேறு விடய்ஙகளை மிக ஆழமாகவும், மிக நாசுக்காகவும் மக்களுக்கு விளக்கியிருக்கின்றார். உயிர்கொல்லி நோயான டெங்கு அதன் நுளம்பு, தேங்கியிருக்கும் நீர், வடிகான் பிரச்சினை, தோணா பிரச்சினை போன்ற விடயங்களை அரசியல்வாதிகளின் ஏமாற்றுவித்தைகளுடன் துணிந்து கூறியிருப்பது விசேடமாகும்.
அரசியல்வாதி பற்றிய கவிதை ஒன்றை இவ்வாறு கூறுகின்றார். பக்கம் 13(2016.12.17ம் திகதி முகநூல்)
கிட்ட இருக்கும்போது
ஊமையாய் உறங்கும்
எட்ட இருக்கும்போது
வீரமாய் பொருமும்! - இப்படிக்கு அரசியல்வாதி
இவ்வாறு தத்துவம் மிக்க வரிகளால் அரசியல்வாதிகள் கொண்டுள்ள ஊமைத்தனங்களை மெத்தனமாய் எடுத்தியம்பியிருக்கும் நூலாசிரியர் இவ்வாறு கூறுகின்றார்.
'தனித்துவம் ஒரு ஊருக்கும் உண்டன்றோ!
ஓரூர் இன்றதை இழந்து மௌனிக்கின்றதே!
ஏனோ புரியவில்லை
பிரதேசவாதம் காழ்ப்புணர்ச்சி
பற்றி பேசுகிறார்கள் முந்தானைக்குப் பின்னால் இருந்துகொண்டு
உன் முகத்தைப் பற்றி
நீ சிரத்தை எடுத்தால் உன்னை சுயநலவாதி என்பதா?
உன் முகத்தைப் பற்றி நீ சிரத்தை எடுக்காமல்
அடுத்தவர்களா எடுப்பார்கள்?'
இவ்வாறு பொதுவான விடயங்களில் தனது பிரதேசம் சார்ந்த விடயங்களில் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருந்து கொண்டு அரசியல் சாசனம் பேசியிருப்பது இன்னும் இந்நூலின் மீதான பார்வையை அகலப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு பல்வேறு விடயங்களை தத்ரூபமானமுறையில் எழுதி ஆவணப்படுத்தியிருக்கும் டாக்டரின் இம்முயற்சி பாராட்டத்தக்கது. சிறப்பான அட்டைப்படத்துடன் பின்பகுதியில் கவிஞர் எழுத்தாள் நவாஸ் சௌபியின் கவித்துளிகளும் காணப்படுகின்றன. அதாவது,
'தனிமனித நோய்களுக்கு மருந்துகொடுக்கும் ஒருவைத்தியர்
சமூக நோய்களுக்கும் மருந்துகட்ட
பல சத்திரசிகிச்சைகளையும் தன் முகநூலில் செய்கிறார்
முகநூலை வழி தவறிகையாள்பவர்களுக்கு
மாற்றுச் சிந்தனையாகவும் மாறவேண்டிய சமூகத்திற்கு
மாற்று மருந்தாகவும் இந்நூல் இருக்கும்' என்கிறார் கவிஞர் நவாஸ்சௌபி.
மொத்தத்தில் சிறப்பான வித்தியாசமான பதிவு. யாரும் முயற்சிக்காத புத்தம் புதிய முகப்புத்தக இலக்கிய சோலைக்குள் இவர் முத்திரை பதித்திருக்கின்றார். முகநூல் எழுச்சி பெற்றிருக்கிறது. எதையோவெல்லாம் எழுதுகின்றவர்களுக்கு இந்நூல் சிறந்த படிப்பினையாக அமைகின்றது என்பது மட்டும் உண்மையாகும். வாசியுங்கள். ஆவணப்படுத்த வேண்டிய ஆவணப்பொக்கிஷம். வாழ்த்துக்கள் டாக்டரின் முயற்சிக்கு
இவ்வாறு பல்வேறு விடயங்களை தத்ரூபமானமுறையில் எழுதி ஆவணப்படுத்தியிருக்கும் டாக்டரின் இம்முயற்சி பாராட்டத்தக்கது. சிறப்பான அட்டைப்படத்துடன் பின்பகுதியில் கவிஞர் எழுத்தாள் நவாஸ் சௌபியின் கவித்துளிகளும் காணப்படுகின்றன. அதாவது,
'தனிமனித நோய்களுக்கு மருந்துகொடுக்கும் ஒருவைத்தியர்
சமூக நோய்களுக்கும் மருந்துகட்ட
பல சத்திரசிகிச்சைகளையும் தன் முகநூலில் செய்கிறார்
முகநூலை வழி தவறிகையாள்பவர்களுக்கு
மாற்றுச் சிந்தனையாகவும் மாறவேண்டிய சமூகத்திற்கு
மாற்று மருந்தாகவும் இந்நூல் இருக்கும்' என்கிறார் கவிஞர் நவாஸ்சௌபி.
மொத்தத்தில் சிறப்பான வித்தியாசமான பதிவு. யாரும் முயற்சிக்காத புத்தம் புதிய முகப்புத்தக இலக்கிய சோலைக்குள் இவர் முத்திரை பதித்திருக்கின்றார். முகநூல் எழுச்சி பெற்றிருக்கிறது. எதையோவெல்லாம் எழுதுகின்றவர்களுக்கு இந்நூல் சிறந்த படிப்பினையாக அமைகின்றது என்பது மட்டும் உண்மையாகும். வாசியுங்கள். ஆவணப்படுத்த வேண்டிய ஆவணப்பொக்கிஷம். வாழ்த்துக்கள் டாக்டரின் முயற்சிக்கு