கொழும்பு சேரிப்புற முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்


காணி பராதீனப்படுத்தல் கட்டுப்பாடுகள் மீதான திருத்தசட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு தொடர்மாடி வீடுகளில் வாழும் கொழும்பு சேரிப்புற முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.

இந்த நாட்டில் நீண்டகால யுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்டுவருகின்ற பொருளாதார புத்தெழுச்சியையடுத்து ஒரு முக்கியமான சட்டத்திருத்தம் சம்பந்தமாக உரையாற்றக்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த நாட்டின் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் சில சட்டத் திருத்தங்களூடாக சரிவர மேற்கொள்ளப்பட்டால் அது நேரடி வெளிநாட்டு முதலீகளுகளை சாத்தியமாக்கும். விவாதிக்கின்ற இந்தச் சட்டம் எங்கள் நாட்டில் காணி மற்றும் கட்டிடங்களில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு பெரிதும் உதவுமென நம்புகின்றேன்.
குறிப்பாக தொடர்மாடி உரித்தாக்கல் சட்டத்தின்கீழ் நான்கு மாடிகளுக்குக் கீழ் கொள்வனவு செய்வதில் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. இது இவ்வாறான கட்டங்களை கட்டி எழுப்புவோர் அவற்றை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்வதில் தடையை ஏற்படுத்துகின்றது. இந்த சட்டத்தினூடாக அந்த கட்டுப்பாடு நீக்கப்படுகின்றது. அத்துடன் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பல்வேறு கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்ற சூழ்நிலையில் பங்குச்சந்தையில் பெயர் குறிப்பிடப்பட்ட கம்பனிகள் வெளிநாட்டு கம்பனிகள் உள்ளடங்களாக கட்டுப்பாட்டை தளர்த்துவதனால் பயனடைகின்றன.
இந்த விடயங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இப்பொழுது பாராளுமன்றத்தில் விவாதத்தைத் தொடர்ந்து சட்டமாக்கப்படப் போகின்றன.
அத்துடன், குறிப்பாக கொழும்பில் நகர மீளெழுச்சி அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் ஏராளமான வசதி குறைந்த வீடமைப்புத் திட்டங்கள் காணப்படுகின்றன. கொழும்பை எடுத்துக் கொண்டால் இவ்வாறான 150ற்கும் மேற்பட்ட சேரிப்புற வசதிகுறைந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவை கொரியா போன்ற வார்த்தைகளால் அழைக்கப்படுகின்றன.

இது உலகளாவிய பிரச்சினையாகும். அநேகமான உலக நாடுகளில் கூட இவ்வாறான வசதி குறைந்த சேரிப்புற குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவை நகர் புறங்களில் உள்ள வசதிகளுடன் கூடிய ஏனைய குடியிருப்புகளை விடவும் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளன.
இவ்வாறிருக்க, இலங்கையைப் பொறுத்தவரை வேகமாக மாற்றமடைந்து வரும் நகர் புறச் சூழலில் இது முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
நூறு நாள் அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராகவும் பணிபுரிந்த காரணத்தினால் இவ்வாறான வசதி குறைந்த குடியிருப்புகளில் வசிப்போரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வசதிவாய்ப்புகளுடன் கூடிய வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்துவதற்கு பெருமளவிலான முதலீட்டு வாய்ப்புகள் காணப்பட்டதை நான் நன்கு அறிந்திருந்தேன்.
துரதிர்ஷ;டவசமாக எங்களது மக்கள் நிலைக்குத்தான மேலுயர்ந்த மாடி வீடுகளில் வசிப்பதை விடவும், மின்னுயர்த்திகளில் ஏறி மேலே செல்வதை விடவும் தனியான வீடுகளில் வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.

இதனை இப்பொழுது நகர அபிவிருத்தி அதிகார சபை உணர்ந்திருக்கின்றது. ஆகையால் நிலைக்குத்தான உயர்மாடி வீடுகளில் வசிப்போரை அவற்றுக்கு பழக்கப்படுத்துவதில் முனைப்புக் காட்டப்படுகின்றது. அதேவேளையில் இவ்வாறான நெரிசல் கூடிய தொடர்மாடி வீடுகளில் வசிப்போர் பலர் மத்தியில் போதைப் பொருள் பாவனையும் காணப்படுவது கவலைக்குரியதாகும். அத்தகைய போதைப் பொருள் பாவனையாளர்கள் மாடி வீடுகளின் சாதணங்களையும், கட்டடப் பொருட்களையும் அப்புறப்படுத்தி வருவதோடு, ஏனைய சமூக பிரச்சினைகளும் தோற்றம் பெற்றுள்ளன.
தலைமை தாங்கும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, இப்பொழுது நான் கொழும்பு கொம்பனித்தெரு மக்களில் ஒருசாராரின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்.
இந்த கொம்பனித்தெரு பிரதேசம் கொழும்பின் பிரதான வர்த்தக மையத்தில் அமைந்துள்ளது. வேகந்த, சுதுவெல்ல போன்ற சில மாநகர வட்டாரங்கள் அங்குள்ளன. அவற்றில் வசதி குறைந்த குடியிருப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் இப்பொழுது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்தை ஈர்த்திருப்பது ஸ்டுவேர்ட் வீதி வேகந்த குடியிருப்பாகும். இந்த ஸ்டுவேர்ட் வீதி வேகந்த வீடமைப்புத் திட்டம் 1971 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த பீட்டர் கெனமன் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
பல வருடகாலம் மாநகர சபையில் அங்கம் வகித்து, அனுபவம் பெற்று இந்த நாட்டின் இடதுசாரி அரசியலில் தானைத்தளபதி ஒருவராகத் திகழ்ந்த பீட்டர் கெனமன் பதவிக்காலத்தில் அது கட்டியெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்பொழுது அங்கு அவர்களை தற்காலிகமாகவே குடியமர்த்துவதாகவும் பின்னர் அவர்கள் அதன் அண்மையில் விதானகே மாவத்தையில் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறிப்பட்டது. ஆனால் இன்னும் அவர்கள் 50 வருடங்களுக்கு முன்னர் தற்காலிகமாக கட்டப்பட்ட வீடமைப்புத் திட்டத்திலேயே வசித்து வருகின்றனர்.
இப்பொழுது அவர்களை நகர அபிவிருத்தி அதிகார சபை ஹேனமுல்லைக்கு கொண்டு சென்று குடியமர்த்த முயற்சிக்கின்றது.

(இந்தச் சந்தர்ப்பத்தில் குறிக்கீடு செய் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தாம் வொக்ஷேhல் வீதியிலுள்ள பேறா வாவி விஸ்தரிப்பு பிரதேசத்திலேயே அவர்களை குடியமர்த்த முடியும் என்று கூறியதாகவும் தமது தொகுதிக்குள் வரும் ஹேனமுல்லையில் வெளியாரை குடியேற்றுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லையென்றும் கூறினார்).

பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறுகின்றபடி, இந்தப் பிரச்சினை உண்மையில் அண்மையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது அதில் இவர்களை தற்காலிகமாக ஹேனமுல்லையில் கட்டப்பட்டுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீடுகளுக்கு இடமாற்றுவது பற்றி சொல்லப்பட்டப்போதிலும் கூட, அந்த அமைச்சரவைப் பத்திரத்தின் இன்னுமோர் இடத்திலே அதற்கு மாற்றமான கருத்து வெளிப்பட்டிருந்த காரணத்தினால் நான் அந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது என்னுடைய சக அமைச்சர்களான சஜித் பிரேமதாச, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் முரண்பட்டேன்.

முஜீபுர் ரஹ்மான் அவர்களே, இந்த விடயம் தொடர்பான உங்களது நிலைப்பாடு சரி. மிகவும் பழுதடைந்திருக்கின்ற அந்த மாடிக்கட்டிடத் தொகுதி அகற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அது அகற்றப்பட வேண்டும் என்பதையும் அது அபாயகரமான நிலையில் இருக்கின்றது என்பதையும் நாங்கள் எல்லோரும் அறிந்திருக்கின்றோம். இருந்தாலும் கூட, வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாசாவும், நகர அதிகார சபைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் சம்பிக்க ரணவக்கவும் இருவருமாக ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்கள். அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் இந்த மாடித் தொகுதியில் வாழ்கின்ற இந்த அப்பாவி வீட்டு உரிமையாளர்களுக்கு அதனால் விமோசனமில்லை. இதில் ஏறத்தாழ 114 குடும்பங்கள் நிரந்தரமாக இருக்கின்றார்கள். இன்னும் 36 பேர் சட்டபூர்வமில்லாமல் மேலதிகமாக வீடுகளை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த குடும்பங்களுக்கும் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியா இருக்கின்றது. அதற்கான தீர்வு கொடுக்கப்பட வேண்டும். அதேவேளை, அவர்கள் நீண்டகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், வாக்குரிமை பெற்றிருக்கின்றார்கள் இந்த அடிப்படையில் அவர்களை கொழும்பு நகரின் இன்னுமொரு மூலைளக்கு கொண்டு போகின்றபோது இவர்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினை வருகின்றது. அவர்களது பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்லுகின்ற விடயங்களில் பிரச்சினைகள் எழுகின்றன. இது சம்பந்தமாக அந்த குடியிருப்பாளர்களோடு நாங்கள் கதைத்தோம். முஜீபுர் ரஹ்மான் அவர்களே, உங்களுக்குத் தெரியும் உங்கள் நண்பரும், எங்களுடைய மாகாண சபை உறுப்பினருமான அர்சாத் நிசாம்தீன் கேட்டுக் கொண்டதற்கிணங்கதான் இந்த பிரச்சினையை இங்கு நான் எழுப்புகின்றேன்.
இந்த அடிப்படையிலே இந்த பிரதேசத்தில் இருக்கின்ற குடியிருப்பாளர்களை இன்னுமொரு தூரப் பிரதேசத்திற்கு நிச்சயமாக மாற்ற முடியாது. அபாயகரமாக நிலையில் இருக்கின்ற கட்டிடம் அகற்றப்படுவதற்கான எந்த எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இவர்களுக்கு இந்த பிரதேசத்திலேயே மாடிக்கட்டிடங்களை அமைத்தக் கொடுத்து அவர்களை குடியமர்த்த வேண்டும். ஆனால் நடக்கின்ற காரியம் என்னவென்றால், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் சொல்லுகின்ற விடயம் உங்களுக்கு 80 மாடி வீடுகளை கட்டித்தர முடியும் என்பதாகும் மீதியுள்ளவர்களுக்கு அங்கு இடம் தரமுடியாது. நீங்கள் இருக்குமிடத்தில் இருக்க வேண்டும் என்கின்ற கதை அவர்களுக்குச் சொல்லப்படுகின்றது. அதனால் குடியிருப்பாளர்கள் குழம்பிப்போய் இருக்கின்றார்கள்.

இந்த இடங்களிலிருந்து அகலவேண்டும் என்பதில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. ஆனால் தாங்கள் இன்னுமொரு முறை ஏமாற்றமடையக் கூடாதென்று அந்த மக்கள் கூறுகின்றனர். பீட்டர் கெனமன் தங்களை தற்காலிகமாக இங்கு வருவதாகச் சொல்லி விட்டு தங்களுக்கு விதானகே மாவத்தையில் நிரந்தரமாக தருவதாக கூறிய இடத்தில் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தனது ஆதரவாளர்களை வேறு இடத்திலிருந்து கொண்டு வந்து குடியேற்றியதாக கூறுகின்றார்கள். அது முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் நடந்தது. அதைப் பற்றி இப்பொழுது தாங்கள் குறைகூறவில்லை என்கின்றார்கள்.

என்னைப்பொறுத்தமட்டில் இவர்களுக்கு இந்த இடத்திலே மீண்டும் தொடர்மாடிக் கட்டிடங்களை கட்டிக் கொடுகின்ற விவகாரத்தில் நான் அமைச்சரவைக்கூட்டத்pல் கேட்டபோது அதற்கு சரியான பதிலை அமைச்சர்களான சஜீத் பிலேமதாச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகிய இருவரும் தரவில்லை. எனவே இதில் நான் அதிருப்தியடைந்திருந்தேன்.

அது பற்றி நான் பிரதமரிடத்திலும் முறையிட்டேன். பிரதமரும் இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் அமைச்சர்களின் கூற்றை எதிர்த்தார்கள். இந்த சபையினூடாக இந்த அமைச்சர்களின் கவனத்திற்கு நான் கொண்டுவருவது என்னவென்றால் இருக்கின்ற பிரதேசத்ததிலேயே அவர்களுக்கு தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -