கிண்ணியா மாஞ்சோலைச் சேனையில் கந்தூரி நடைபெறவிருப்பதனையிட்டு அப்பகுதியில் கடைத் தொகுதிகள் உட்பட ஏனைய அதனுடனான விடயங்களை செய்கின்ற போது கட்டாயமாக கிண்ணியா நகர சபையின் அனுமதியை சட்டரீதியாக பெற்றுக் கொள்ள வேண்டுமென நேற்று(01)கிண்ணியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமினால் விசேட அறிக்கையின் ஊடாக தெரிவிக்கப்பட்டது.
இத் தீர்மானம் தொடர்பாக 2018.04.27 ஆந் திகதிய சபைத்தீர்மானத்திற்கமைவாகவும் மற்றும் தவிசாளர் அவர்களின் தலைமையில் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் 2018.05.01 ஆந் திகதி நகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உலமா சபை, சூரா சபை தலைவர், உலமா சபை செயலாளர் பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சில தீர்மானங்களும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.
கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறாத வண்ணம் நிகழ்வுகளை நடாத்துதல்,
ஒவ்வொரு கடைத்தொகுதிக்கும் அனுமதிக்கட்டணம் 5,000.00 ரூபா நகர சபையில் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதுடன் எதிர்வரும் 2018.05.05 ஆந் திகதிக்கு முன்னர் நகர சபையின் அனுமதியினையும் பெற்றுக் கொள்ளல் வேண்டும். அனுமதிக் கட்;டணம் செலுத்தாமல் அமைக்கப்படும் கடைகள் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,
,மாடுகள் அறுப்பதாயின் உரிய முறையில் அனுமதிக்கட்டணம் செலுத்தி நகர சபையின் அனுமதியை 2018.05.03 ஆந் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளல் வேண்டும்,
இக்கலந்துரையாடல் கிண்ணியா நகர சபையின் வருமானத்தை பெற்றுக் கொள்ளும் வகையிலும், பிரதேசத்தின் கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதாயின் உலமா சபையின் அனுமதியினை பெற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.