அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா புகழாரம்
“நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாணத்தில் உருவான மிகவும் வெற்றிகர அரசியல்வாதியாவார்” என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா புகழாரம் சூடினார். நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று வெள்ளிக்கிழமை தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
“ 25 வயதில் நாடாளுமன்றத்துக்கு வந்த இளம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ். 1989ஆம் ஆண்டு முதல் எனது நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும் - மரியாதையும் உள்ளது.
தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் - வாய்ப்பையும் தனது மக்களுக்கும், பிரதேசத்துக்கும் சேவைசெய்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர். அதேபோன்று அவருக்கு அரசியல் தொடர்பில் நன்கு அனுபவம் உள்ளது. மக்களுடன் சகஜமாக பழகக்கூடிய ஒருவர். இதனால் அவரது அரசியல் வாழ்க்கை பெருமதியானதும் - அழகானதுமாகும்.
நாட்டுக்கும், சமூகத்துக்கும் சேவைசெய்வதற்கு பல வேலைத்திட்டங்களை அரசியலுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் முன்னெடுத்துள்ளார். அதில் விசேடமாக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இவரது முயற்சியால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை பாராட்டத்தக்கது.
எனவே எந்த வேலையையும் தனியாக இருந்து செய்யக் கூடிய திறன் ஹிஸ்புல்லாஹ்வுக்கு உள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு இவரைப் போன்ற ஒருவரை இராஜாங்க அமைச்சராக பெற்றுள்ளமை அமைச்சர் கபீர் ஹாஷீமுக்கு பக்கபலமாக அமையும்.
நாட்டின் அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துகின்ற இந்த அமைச்சுக்கு நிதி திரட்டல் உள்ளிட்ட ஏராளமான சவால்கள் இருக்கின்றன. இருவரும் இணைந்து புரிந்துணர்வோடு பணியாற்றுவதன் மூலம் இந்த அமைச்சை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க முடியும்.
கிழக்கு மாகாணத்தில் உருவான மிகவும் வெற்றிகரமான அரசியல்வாதி ஹிஸ்புல்லாஹ். அவருக்கு இந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை கிழக்கு மாகாணத்துக்கு கௌரவமாகும்” - என்றார்.