இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான சேவையை தொடர்ந்தே செய்து கொண்டு வரும் இதற்கு அமைச்சு பதவி தான் வேண்டும் என்பது இல்லை. அமைச்சு பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மக்களுக்கான பணிகள் தொடர்ந்து வரும் என்பதை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலையில் 01.05.2018 அன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் எமது ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
01.05.2018 அன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினமான மேதினத்தை கொண்டாடுகின்றார்கள். அதேபோன்று இ.தொ.காவும் கொட்டகலையில் மேதினத்தை விமர்சையாக கொண்டாடியது. இலங்கையில் வெசாக் பண்டிகை காரணமாக எதிர்வரும் 7ம் திகதி மேதின விழாவை அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் கேட்டிருந்தது.
பௌத்த மதத்தின் இந்த பண்டிகை நிகழ்வுக்காக மரியாதை கொடுத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் 7ம் திகதி மேதின நிகழ்வை பேரணியுடனும், பொது கூட்டத்துடனும் நுவரெலியாவில் நடத்தவுள்ளது.
அதேசமயத்தில் 01.05.2018 அன்றைய தினம் தொழிலாளர்களுக்குரிய தினமானது. இதனையொட்டி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் மேதினம் என்ற வகையில் நாமும் இந்த மேதின நிகழ்வை 01.05.2018 அன்றைய தினம் கொண்டாடினோம்.
இதன்போது, 01.05.2018 அன்று அமைச்சரவை மாற்றம் அரசாங்கத்தில் கொண்டு வரப்படுகின்றது. இதில் உங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்குமா அல்லது தருவதாக கூறியிருக்கின்றார்களா என ஊடகவியலாளர் கேட்டபோது, அவர் பதிலளித்ததாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கு சேவை செய்ய அமைச்சு பதவி தான் வேண்டும் என்பதை எதிர்பார்த்து இதுவரையும் மக்களுக்கு சேவை செய்யவில்லை. மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து வருவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் இதற்கு ஒரு சான்றாக அமைந்திருந்தது என சுட்டிக்காட்டி பதிலளித்தார்.