அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
மன்னார், முசலிப் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாது தடுப்பதிலும், அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை தட்டிப்பறிப்பதிலும் பல கட்சிகள் தீவிரமான சதி முயற்சிகளில் ஈடுபட்ட போதும், அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து இறைவனின் உதவியினால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்ததாக மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முசலிப் பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை (03) முசலிப் பிரதேச சபையில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்
முசலிப் பிரதேச சபையின் தவிசாளர் கலீபத் சுபியான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது,
தமிழ் மக்களின் இன உரிமைக்காக போராடி வரும் கட்சியும், முஸ்லிம் மக்களின் உரிமை காக்க புறப்பட்டுள்ளதாக பறைசாற்றும் கட்சியும் இணைந்து, இன்னும் சில கட்சிகளின் உதவியுடன் முசலிப் பிரதேச சபையை எம்மிடமிருந்து எப்படியாவது தட்டிப்பறித்து, தம்வசப்படுத்திவிட வேண்டுமென்று கங்கணங்கட்டி நின்றனர். இந்த முயற்சியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட முன்னின்று செயற்பட்டன. யாழ்ப்பாணத்திலும், முசலியிலும், மன்னாரிலும் மாறிமாறி இரகசியக் கூட்டங்களை நடாத்தி, தாங்கள் எப்படி திருட்டுத்தனமாக அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மந்திர ஆலோசனை நடாத்திய போதும், இறைவன் அநியாயங்களுக்கு உதவாமல் எங்களுக்கே உதவியளித்தான்.
ஆட்சியமைப்பதில் இவர்கள் காட்டிய அதிதீவிர செயற்பாடுகளால் எமது ஆதரவாளர்கள் நிலைகுலைந்த போதும், அவர்கள் கேட்ட பிரார்த்தனைகளால் நீதியான முடிவு எமக்குக் கிடைத்தது. முசலிப் பிரதேச சபையை நாம் வெற்றி கொண்டமையை ஒரு தனிநபரின் வெற்றியாகவோ, ஒரு கட்சியின் வெற்றியாகவோ நாம் எண்ணிக்கொள்ளாது, சமூக உணர்வு கொண்டவர்களின் வெற்றியாகவே கருத வேண்டும்.
தேர்தல் காலங்களில் அரச அதிகாரிகள் சிலர் நயவஞ்சகத்தனமான முறையில் நடந்துகொண்டனர். எமது வேட்பாளர்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர். ஆனால், எங்களால் தொழில்களைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு அரச அலுவலரிடமும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் வற்புறுத்தி உதவி கேட்கவில்லை.
யுத்த காலத்திலும், யுத்தம் முடிந்த பின்னரும், மாகாண சபை நிருவாகம் வருவதற்கு முன்னரும், வந்ததன் பின்னரும் நாங்கள்தான் இந்தப் பிரதேச மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றோம். இன, மத, குல வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் ஒரே கண்ணோடு, வேற்றுமையில்லாது பார்த்து வருவது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.
மாந்தை, மடு, முசலி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கட்டியெழுப்புவதில், நாங்கள் எந்தக் காலத்திலும் பின்னின்று செயற்படவில்லை. ஆபத்துக்கு உதவியவர்கள் நாங்களே. ஆனால், தேர்தல் காலத்தில் மட்டும் இங்கு வந்து, இந்தப் பிரதேசத்துக்கு சேவையாற்றும் எங்களையும் விமர்சித்துவிட்டு, வாக்குகளைச் சூறையாடும் கூட்டத்துக்கு இந்தத் தேர்தலில் நல்ல பாடம் கிடைத்திருக்கின்றது.
மன்னாரில் எமக்குக் கிடைக்க வேண்டிய 03 பிரதேச சபைகளைக் கிடைக்க விடாது தடுக்க முனைந்தனர். ஆனால், மன்னாரில் 03 பிரதேச சபைகளையும், முல்லைத்தீவில் மேலும் ஒரு பிரதேச சபையையும் கைப்பற்ற இறைவன் எமக்கு உதவினான் என்று அமைச்சர் கூறினார்.
இந்த விழாவில், முசலிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகுசீன் றைசுதீன், வடமாகண சபை உறுப்பினர் ஜெயதிலக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அமீன், கலாநிதி இஸ்மாயில், லியாவுத்தீன், அன்சில், அசார்தீன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.