அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ பகுதிகளில் வீடுகள் இல்லாதோரின் விபரங்கள் பிரதேச செயலக அதிகாரிகளினால் திரட்டப்பட்டு வருகின்றது.
இதேநேரம் அரசியல் கட்சி ஆதரவாளர் ஓரிருவர் பிரதேச செயலக அதிகாரிகள் சென்ற வீடுகளுக்கு சென்று அவ்வீடுகளை புகைப்படம் எடுத்து தங்களினால் மாத்திரம் வீட்டுத்திட்டம் வழங்க முடியுமெனவும் மொறவெவ பிரதேச செயலக அதிகாரிகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் அனைத்தும் ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் ஊடாகவும்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகவுமே பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆனாலும் சில அரசியல்வாதிகள் தங்களது ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு மக்களுக்கும்,பயனாளிகளுக்குமிடையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் வீட்டுத்திட்டம் தருவதாகவும்,மலசல கூடம் தருவதாகவும்
அதற்கான
நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
மொறவெவ பிரதேச செயலகத்தினால் எதிர்காலத்தில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு திட்டங்கள் வழங்க தரவுகளை திரட்டி வருவதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதனை கேள்வியுற்ற உள்ளூர் அரசியல் வாதியொருவர் அவரது ஆதரவாளரை மொறவெவ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்ற வீடுகளுக்கு அனுப்பி வீடுகள் கட்டித்தருவதாக கூறி புகைப்படங்களையும் எடுத்து வருவதாகவும்
தெரியவருகின்றது.
வீட்டு திட்டத்தில் மக்கள் ஏமாற்றமடைய வேண்டாமெனவும் மொறவெவ பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மக்களை குழப்பும் நோக்கில் பொய் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவ்வாறான செயற்பாட்டில் அரச அதிகாரிகளைத்தவிர வேறு யாராவது செயற்பட்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் மொறவெவ பிரதேச செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.