கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் கூறியதாவது,
ஹலால் விடயத்தில் முஸ்லிம் மனம் திறந்து பேசி தீர்வு கண்டது போல் ஏனைய விடயங்களையும் பேச வேண்டும் என அமைச்சர் சம்பிக்க உபதேசம் செய்வது ஆட்டுக்குட்டி எப்படி செயற்பட வேண்டும் என்று ஓநாய் உபதேசம் செய்வது போன்றதாகும். ஹலால் விடயம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவில்லை. மாறாக ஜம் இய்யத்துல் உலமாவின் கையாலாகாத்தனத்தின் காரணமாக அரசின் அழுத்தங்களுக்கு பணிந்து அடிமைத்தனமாய் கை விடப்பட்டதாகும். ஹலாலை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்றும் இது விடயத்தில் பேச்சுக்களை நீண்ட காலத்துக்கு தொடர வேண்டும் எனவும் உலமா கட்சி பகிரங்கமாக சொன்னது. ஆனால் ஓரிரு பேச்சுவார்த்தையை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் உலமாக்களிடம் ஆலோசனை கேட்காமல் திடுதிப்பென உலமா சபை ஹலாலை விட்டுக்கொடுத்தன் காரணமாகவே சிங்கள இனவாதிகள் உசார் பெற்றதுடன் கிரேன்பாஸ் பள்ளி உடைப்பு, அளுத்கம போன்ற சம்பவங்கள் நடை பெற்றன.
கிறிஸ்தவ சமூகத்தில் இருக்கும் கட்டுப்பாடான தலைமைத்துவம் இருப்பது போல் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்பது உண்மைதான். இதற்கு காரணம் சர்வாதிகாரமாக நடக்கும் உலமா சபையும் தான்தோன்றித்தனமாக கண்ட கடப்படி எல்லாம் மார்க்கம் பேசும் சமூகமுகமுமாகும். இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த 13 வருடங்களாக அரசியல் மற்றும் ஆத்மீக தலைமைத்துவமாக உலமா கட்சி செயற்படுகிறது. சமூகம் இதன் பெறுமதியை உணராவிட்டாலும் தொடராக தன்னால் முடிந்த பணியை செய்து வருகிறது.
கட்டுப்பாடான சமூகம் உருவாகுவதாயின் பல சட்டங்களை பாராளுமன்ற அனுமதியுடன் கொண்டு வர வேண்டுமென உலமா கட்சி சொல்லி வருகிறது. மௌலவி தராதரப்பத்திரம் மத்ரசாக்கள் மூலம் வழங்கப்படாமல் மத்ரசா கல்வி முடித்து 35 வயது பூரணமான ஒருவருக்கு உலமா சபையும் முஸ்லிம் சமய அமைச்சும் இணைந்து பொதுப்பரீட்சை நடத்தி அதன் பின்பு உலமா சபையினால் மௌலவி தராதரம் வழங்கப்பட வேண்டும் என கூறி வருகிறோம். அதே போல் இரண்டு தடவைக்கு மேல் உலமா சபைத்தலைவர் தொடர்ந்தும் தலைவராக இருக்க கூடாது என சொல்லி வருகிறோம்.
அதே போல் உலமா சபை நேரடி அரசியலில் செயல்பட முடியாது என்பதால் உலமா கட்சியை ஏற்று அதனை ஊக்குவிக்க வேண்டும் என சொல்லி வருகிறோம். அதே போல் உலமா மௌலவிமார்
தவிர வேறு யாரும் மார்க்க விடயங்களை பகிரங்கமாக பேசுவதோ எழுதுவதோ சட்டப்படி குற்றம் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டுமென கோருகிறோம். முஸ்லிம் கட்சிகளுக்கு கிடைக்கும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 40 வயதுக்கு மேற்பட்ட, பல்கலைக்கழக தராதரம் உள்ள, அரசியலில் பகிரங்க ஈடு பாடுள்ள ஒரு மௌலவியையாவது நியமிக்க வேண்டும் என உலமா சபை அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இதற்கு உடன்படாத கட்சிக்கெதிராக உலமாக்களை பயன்படுத்த் வேண்டும் என சொல்லி வருகிறோம். இவை அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காகியதால் இன்று சம்பிக்க ரணவக்க முஸ்லிம் உலமாக்களுக்கு உபதேசம் செய்யும் அளவுக்கு கேவலமாகிப்போயுள்ளோம்.
அரசாங்கம் நினைத்திருந்தால் அம்பாரை, திகன கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்தியிருக்கலாம் என அரசின் அமைச்சராக இருந்து கொண்டு இவர் சொல்வதன் மூலம் இவர் ஒரு வெட்கங்கெட்ட அமைச்சர் என தன்னை பிரகடனப்படுத்தியுள்ளார். இவரும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் என்ற வகையில் இவரும் குற்றவாளியே.
இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து பொய் பிரசாரங்களுக்கு அடிப்படையாக இருப்பது சம்பிக்க ரணவக்க எழுதிய அல் ஜிஹாத் என்ற பொய்க்கற்பனை புத்தகமாகும். இப்புத்தகத்தை எழுதியமை தவறு என்றும் இதனை தான் வாபஸ் வாங்குவதாக இவர் அறிவிக்காத நிலையில் உலமா சபையும் கொழும்பை தலைமையாக கொண்டு ஏனைய முஸ்லிம் இயக்கங்களை சந்தித்து அவர் முன்பாக தலை குணிந்து உபதேசம் பெற்றமை முஸ்லிம் சமூகத்தலைமைகளின் வெட்கங்கெட்ட செயலாகவே உலமா கட்சி பார்க்கிறது.