கிராம மாதர் சங்கங்களின் நோக்கம் கிராமங்களை முன்னேற்றுவதாகும்- மாகாணப்பணிப்பாளர் கவிதா உதையக்குமார்
கிராம மாதர் சங்கங்களின் நோக்கம் கிராமங்களை முன்னேற்றுவதாகும் என கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கவிதா உதையக்குமார் தெரிவித்தார்.
கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தின் கிராமிய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கிராம மாதர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்த ”சர்வதேச மகளீர் தினம் -2018“ பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் எஸ்.கே.லவநாதன் தலைமையில் (13) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாணப் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றும் போது,
கிராம மட்டத்திலுள்ள மாதர் சங்கங்கள் அந்தக் கிராமத்தின் அபிவிருத்திக்கு முக்கியமானவர்கள். பெண்கள் பலமாக இருப்பதால் தான் வீட்டையும் கிராமத்தையும் ஏன் நாட்டையும் கட்டியெழுப்ப முடிந்திருக்கிறது. கல்முனை தமிழ் பிரதேச மாதர் சங்கங்கள் மிகவும் சிறப்பாக செயற்படுகிறார்கள். இங்குள்ள நிங்கள் மட்டும் வளர்ச்சியடைந்தால் போதாது அருகிலுள்ள ஏனைய கிராமங்களுக்கும் உங்கள் சேவையை தொடர வேண்டும். அதேபோன்று ஏனைய மாவட்டத்திலுள்ள கிராம மாதர் சங்கங்கள் இவர்களது சேவையை முன்னுதாரணமாக கொண்டு சேவையாற்ற வேண்டும்.
இங்கு இடம்பெற்ற நிகழ்சிகளை பார்த்து நான் திருகோணமலைக்கு போக வேண்டும் என்பதையும் மறந்து மாலை 6.00 மணி தாண்டியும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்து விட்டடேன். பட்டிமன்றம் சிறப்பாக இருந்தது. இந்த உலகம் இயங்குவதற்கு ஆண்களும்- பெண்களும் சமமாக தேவை. இந்த சமத்துவம் பெண்களுக்கு மறுக்கப்படுவதால் தான் போராட்டங்களும் பிரச்சினைகளும் உருவாகின்றன.
நான் மாகாணப் பணிப்பாளராக கடமையேற்று ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது ஆனால் கல்முனையில் மாதர் சங்கங்களின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வது இதுவே முதல்தடவையாகும். எதிர்காலத்தில் உங்கள் பிரதேசத்திலுள்ள மாதர் சங்கங்களின் சேவைக்கு எமது திணைக்களமும் நானும் பூரண ஒத்துளைப்பு வழங்குவோம் அத்துடன் இன்றைய நாளை என்னால் வாழ்நாளில் மறக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
பிரதேச மட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பெண்கள் கௌரவிக்கப்பட்டதுடன் “அவள் இன்றி அவனியில்லை“ மற்றும் “அவன் இன்றி அவனியில்லை“ எனும் தலைப்புகளில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற்றது.