திகன இனக்கலவரம்; அடுத்து என்ன?


அ.அஸ்மின் வடக்கு மாகாணசபை உறுப்பினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
லங்கையில் இனக்கலவரங்கள் ஒன்றும் புதிதல்ல, 1915 இன்றுவரை இனரீதியான பல்வேறு கலவரங்களை இலங்கை மக்கள் சந்தித்தே வந்திருக்கின்றார்கள். அத்தகைய இனக்கலவரங்கள் எல்லாம் மனித அழிவுகளையும், மனிதர்களின் அமைதியையும் குலைத்துச் சென்றிருக்கின்றன, இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வும், நம்பிக்கையும் விலகிப்போயிருக்கின்றது; அதனைத் தனிப்பதற்கு பல்வேறு நல்லிணக்கம் சார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவ்வப்போது இனவாதப் பிசாசு வெளிக்கிளம்பி தன்னுடைய அட்டகாசங்களை அரங்கேற்றிக்கொண்டேயிருக்கின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கிட்டிய கடந்த காலத்தில் மாவனல்லை, மாளிகாவத்தை, அளுத்கமை, கிந்தோட்டை, அம்பாறை இப்போது திகன; இதுவும் கடந்து போகும் நிலைதான் இருக்கின்றது.

இன்றைய தினம் காலை முதல் பிற்பகல்வரையில் திகன பிரதேசத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் களவிஜயம் செய்யும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது;

திகன பிரதேசத்தில், கும்புக்கந்துர, ஹிஜ்ராபுர, அம்பஹகலந்த, திகன, பல்லேகல, ஹெங்கல்ல, பளகொல்ல, உடுஸ்பத்துவ, மொறகஹாமன அம்பாலன, போன்ற கிராமங்களில் 4500 முஸ்லிம் குடும்பங்கள் வசித்துவருகின்றார்கள். அழகிய இயற்கை வனப்பு மிகுந்த இந்தப் பிரதேசங்களில் சிங்கள, தமிழ் மக்களோடு மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களோ, அல்லது அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மக்களோ, இப்படியான்ன ஒரு அசம்பாவிதம், அழிவு இடம்பெறும் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. அந்தப் பிரதேசத்தில் ஒரு சிலருக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிகின்றது; அந்தக் கொலையை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வெளியிலிருந்து திட்டமிடப்பட்ட ஒரு கலவரத்தை வெளியில் இருந்து வந்தோரும், ஊரிலே இருந்த ஒருசிலரும் இணைந்து அரங்கேற்றினார்கள்; என்பதே அங்கிருக்கும் மக்கள் எம்மிடம் தெரிவிக்கும் முதன்மையான கருத்தாக இருக்கின்றது.

160 முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு தீக்கரையாக்கப்பட்டிருக்கின்றன; 100ற்கும் அதிகமான வீடுகளுக்கு சிறிய மற்றும் பாரிய சேதங்கள் நிகழ்ந்திருக்கின்றன, 6 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன, ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் இப்படியாக அழிவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. இது சடுதியாக நிகழ்ந்த ஒன்றல்ல, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு இனக்கலவரமேயாகும், அத்தோடு இக்கலவரத்தை எங்காவது ஒரு இடத்தில் தொடங்கி நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கவே இதன் பின்னாலிருந்து இயங்கிய சக்திகள் முயற்சித்திருக்கின்றன, ஆனால் அது உடனடியாகக் கைகூடவில்லை, இருந்தபோதிலும் அவ்வாறான ஒரு நாடளாவிய கலவரத்திற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன என்ற கருத்தையும் நாம் புறந்தள்ளிவிடமுடியாது.

கலவரத்தினை நேரடியாகக் கண்டவர்கள் பலர் பின்வரும் விடயங்களை ஒரேவிதமாகக் குறிப்பிட்டிருந்தார்கள்,

· இக்கலவரத்திற்கு ஒரு சிலர் தலைமை தாங்கினார்கள். முறையான திட்டமிடலோடும், வழிகாட்டலோடுமே இக்கலவரம் முன்னெடுக்கப்பட்டது.

· அவர்களிடம் பிரதான முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் இருந்தன. அவற்றை அவர்கள் சரிபார்த்து உறுதி செய்த பின்னரே அவற்றுக்குத் தீ வைகப்பட்டன,

· பொலிஸார் கலகக்காரர்களை அடக்கும் சக்தியற்றிருந்தார்கள்.

· விஷேட அதிரடிப்படையினர் கலகக்காரர்களுக்குத் துணைபோகும் வகையிலேயே செயற்பட்டார்கள்.

· இராணுவம் வந்தததன் பின்னரே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

· போன்ற தகவல்களை அவர்கள் எமக்கு வழங்கினார்கள். இந்தத் தகவல்களை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். கலவரங்களுக்குரிய இடங்களாக தெரிகின்ற பிரதேசங்களில் இத்தகைய விடயங்களை நாம் கருத்தில் கொண்டு கவனிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இக்கலவரத்திற்கான முழுமையான பொறுப்பையும் இலங்கை அரசாங்கமே ஏற்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பாதுகாப்பையும், நிவாரணத்தையும் வழங்கவேண்டியதும் இலங்கை அரசாங்கத்திற்குரியதாகும்; இதில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. முஸ்லிம் மக்கள் சார்பிலே உடனடியாக பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அவை அரசாங்கத்தினால் சாதகமாகப் பரிசீலிக்கப்படல் வேண்டும்.

· திகன, பலகல்ல போன்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படல் வேண்டும்.

· கண்டி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும் இடமாற்றம் செய்யப்படல் அவசியம்.

· பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிலைமை சுமூகநிலைமைக்கு வரும்வரையில் இரானுவப்பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும்.

· அவசரகால சட்டத்தைச் சாட்டாக வைத்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை மேலும் நசுக்கும் செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான உத்தரவாதம் அவசியம்.

· இழப்புகள் அனைத்தும் உள்ளூர் பொலிஸ் நிலையம், கிராம உத்தியோகத்தர்களினால் மதிப்பீடு செய்யப்பட்டு உத்தியோகபூர்வ இழப்பு மதிப்பீடு இரண்டுவாரங்களுக்கு வெளியிடப்படல் வேண்டும்.

· இழப்பீடுகள் அனைத்தும் துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கையெடுக்கப்படல் வேண்டும்.

அடுத்த கட்டமாக குறிப்பிட்ட கைகலப்பும், மரணமும் இக்கலவரத்தின் நேரடிக் காரணி அல்ல என்றே அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கும் நிலையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மற்றும் அமித் போன்றோருடைய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் மௌனமாக இருக்க முடியாது. இவர்களோடு இணைந்து இன்னும் பலர் இக்கலவரத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கின்றார்கள் இவர்களுடைய விடயத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும், இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதவகையில் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இனவாதக் கும்பல் முற்றாக சட்டத்தினால் தண்டிக்கப்படல் வேண்டும். இப்படியாக ஒரு துரிதமான நடவடிக்கை அமுலாகாதவரை குறித்த இனக்கலவரத்திற்கான எவ்விதமான காத்திரமான தீர்வையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்படும்.

நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் தைரியம் இழக்கவோ அமைதியிழக்கவோ அவசியம் கிடையாது, இப்போது ஏற்பட்டிருக்கின்ற கலவரமான சூழ்நிலையினை நாம் தைரியமாக எதிர்கொள்ளவேண்டும், இதற்காக புதிய அரசியல் பலங்கள் எதுவும் அவசியமற்றது, இப்போது இருக்கும் அரசியல் பலம் போதுமானதாகும், ஆனால் இருக்கின்ற அரசியல் பலத்தை நெறிப்படுத்தக்கூடிய சிவில் சமூக ஒழுங்கமைப்புக்கள் பிரதேசங்கள்தோறும் உருவாக்கப்பட்டால் அதுவே போதுமானதாகும், அனைவரையும் அரவணைத்து, உள்ளீர்த்து அத்தகைய ஒரு சிவில் சமூக அமைப்புக்களை ஏற்படுத்தி அவற்றினூடாக விடயங்களைத் துரிதமாகக் கையாள்வதே காலத்தின் தேவையாகும்.

தகவல் எம்.எல்.லாபிர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -