இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினரான முஸ்லிம்கள். இக் கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது. மே 29, 1915 இல் கண்டியில் பெரும்பான்மை சிங்கள பெளத்த கும்பல் ஒன்று பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர். இக்கலவரத்தை அடக்கும் பொருட்டு அன்றைய குடியேற்றவாத பிரித்தானிய ஆட்சியாளர்கள் படைத்துறைச் சட்டத்தை அமுல்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.
நாட்டில் நல்லாட்சி நிலவுவதாக கூறப்படும் இன்றயசூழலில் கடந்த 1915 ஐ மிஞ்சும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அம்பாறையில் கொத்து ரொட்டியில் கர்ப்பத்தடை மாத்திரை கலக்கப்பட்டுள்ளதாக போலியாகக் கூறிக்கொண்டு பள்ளிவாசல்களையும் கடைகளையும் உடைத்தவர்கள் இப்போது தங்களது அராஜகத்தை கண்டியில் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றனர்.
கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற இனவாத வக்கிர தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த மௌலானா, இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நாட்டில் அவசரகாலச் சட்டமும், விசேடமாக கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையிலும் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கின்ற போது இந்த கோரத் தாக்குதல்களில் பின்னால் இருக்கிற மறை கரங்கள் யார் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்த இனவாத சம்பவங்களில் எல்லாம் மிகவும் உச்சக் கட்டமாக இதனை திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கின்றார்கள். 20 இற்கு மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு இனவாதிகள் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். அதில் திகன உள்ளிட்ட சில பள்ளிகள் முற்றாக சேதாரம் செய்யப்பட்டும், பல பகுதியளவிலும் மற்றும் சில பள்ளிவாசல்கள் பெற்றோல் குண்டுகள், கல் வீச்சுகள் மூலமும் தாக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களின் கோடிக்கணக்கான ரூபாய்கள் பொறுமதியான உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டும், சூறையாடபட்டும் இருக்கின்றன. ஒரு இளைஞன் தனது இன்னுயிரை நீத்திருக்கிறார். என்றும் தெரிவித்தார்.
அதிகப்படியான வாக்குகளை கொடுத்து நல்லாட்சியை கொண்டுவந்த முஸ்லிம்களுக்கு அந்த ஆட்சி வழங்கிய கைம்மாறு இதுதானா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
1915 ல் அன்னியர் ஆட்சியில் அப்போது இடம்பெற்ற கலவரம் குறுகியகாலத்துக்குள் முடிவுக்கு வந்த போதிலும் முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் 21 பேரை தன்னகத்தே கொண்டுள்ள நல்லாட்சியில் அவசரகால சட்டத்தை கையில் வைத்திருக்கின்றவர்களால் இன்றுவரை சுமூக நிலையை ஏற்படுத்த முடியவில்லை என்ற விடயம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்துல் காதர் மசூர் மௌலானா தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வீணான கதைகளைச் சொல்லிக்கொண்டிராது பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பில் அரசு விரைந்து செயற்பட்டு அவர்களுக்கான முழுமையான நிவாரணங்களை வழங்கவேண்டும் என்றும் அந்த மக்களினதும் ஏனைய பிரதேச மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்தகால ஆட்சியின்போது அளுத்கம போன்ற இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான காடைத்தனத்தை அப்போதைய அரசு விரைந்து முடிவுக்கு கொண்டுவந்ததுடன் அவசரமாக இராணுவத்தினரைக் கொண்டு கட்டிடங்களை அமைத்துக்கொடுத்ததாகவும் அந்த கலவரத்தை வைத்தே ஆட்சிக்கு வந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெறும்போது கைகட்டி வாய்மூடிகளாக இருப்பது வியப்பைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கலவரங்களுக்கு கடந்தகால ஆட்சியாளர்களே காரணமாக இருப்பதாக கூறும் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்தவர்கள் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் இருப்பதுதான் நல்லாட்சியா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
கலவரங்களில் சாதாரணமானவர்களே நேரடியாக ஈடுபடுவது புலனாகியுள்ளதாக தெரிவித்துள்ள மௌலானா, அவர்களை விடுத்து புத்திஜீவிகள் மற்றும் மார்க்க அறிஞர்களுடன் மட்டும் பேசுவதால் மட்டும் பிரச்சனைகளை முடிவுக்குக்கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இடம்பெற்றுள்ள அனைத்து அசம்பாவிதங்களையும் நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ள மௌலானா, முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களை சில ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் இலங்கையில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அரேபிய தோற்றப்பாட்டை நகல் செய்வதை விடவேண்டும் என்று கோரியுள்ளதாக அறிவதாகவும் இஸ்லாமியர் விடயத்தில் இவர் மூக்கை நுழைக்காமல் இருப்பதை முஸ்லிம்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்துகொண்டு முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கத்தை பிழையாக வழிநடத்திய சம்பிக்க ரணவக்க போன்றோர் இந்த அரசாங்கத்திலும் இருந்துகொண்டு இரட்டை வேடம் போடுவதை மக்கள் அறியாமலும் இல்லை என்று தெரிவித்த மௌலானா, இவர் விடயத்தில் முஸ்லிம்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் தனது பார்வையை திருப்பவேண்டும் என்று கேட்டுள்ள மௌலானா, இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அனர்த்தங்களை அந்தமக்கள் இனி மறக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.