' இன்று சிலர் மு.கா தலைமையை ஒழிக்க வேண்டுமென்று கூறிக்கொண்டு, எமது ஊரின் பாராளுமன்ற உறுப்பினர் பைசாலை ஒழிக்க சதித்திட்டம் தீட்டிச் செயற்படுகின்றனர். உண்மையில் அவர்களின் நோக்கம் தலைமையை ஒழிப்பது என்றால் நிந்தவூர் ஜூம்ஆப்பள்ளி வாசலுக்கு வந்து சத்தியம் செய்யச் சொல்லுங்கள். அதுவல்ல அவர்களின் நோக்கம். இந்த ஊரின் பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர் பைசாலின் பதவியை இல்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் அவர்களது உள்நோக்கம். மக்கள் பலம் அவர் பக்கம் இருக்கும் வரை இது நிச்சயம் நடைபெறாது' என்று ஒசாக்கா லங்கா பிறைவட் நிறுவனப் பணிப்பாளரும், ஐ.தே.கட்சி வேட்பாளருமான ஏ.அலிக் கான் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீ.ல.மு.கா வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு நிந்தவூர் 06ம் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பேசும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஏ.அலிக்கான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேட்பாளர் எம்.ரி.எம்.சப்றாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசால் காசீம், வேட்பாளர்களான சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம், ஏ.மஃறூப் மௌலவி, எம்.எம்.அன்சார் மாஸ்டர், எஸ்.எம்.ஐ.எஸ்.ஸறபுல்லாஹ் மௌலானா, எம்.ஐ.பாத்திமா றிஹானா, கே.எம்.எம்.ஜாரீஸ், தேசியப்பட்டியல் உறுப்பினர்களான ஏ.எல்.நஜிமுத்தீன் ஆசிரியர், எம்.ஐ.ஆதம் அலி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் ஏ.அலிக்கான் மேலும் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'எனது நோக்கம் முதலில் ஊழலை ஒழிப்பது. இந்தியாவில் நடிகர்களான ரஜனிகாந்தும், கமல்ஹாசனும் ஊழலை ஒழிக்கப் பாடுபடுவது போல் நானும் இங்கு ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கிறேன். எனவே, எனக்கு என்றும் உங்கள் ஆதரவு கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். எதிர்வரும் பெப்ரவரி 10ந் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் நீங்கள் அனைவரும் யானைச் சின்னத்திற்கு வாக்களித்து என்னையும், ஏனைய எனது அணியினரையும் வெல்லச் செய்து எமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாப்போம்' எனக் கேட்டுக் கொண்டார்.






