க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களின் உழைப்பினை தின்னு தின்னு வளர்ந்த யானை வீட்டிற்குள் இருக்கின்றது. இதனை விரைவில் காட்டுக்குள் அனுப்பி விடுங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
பூண்டுலோயா நகரில் 06.02.2018 அன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை பணமான 88500 ரூபாயை யானைக்கு வாழை மட்டைகளை வாங்கி கொடுத்தீர்கள். நன்றாக தின்னது. தொழிலாளர்களின் திறன் விருத்தி பணமான 140 ரூபாயை யானை ஆடை இல்லாமல் இருக்கின்றது என்று மானத்தை காக்க துண்டு துணியையும் வாங்கி கொடுத்தீர்கள்.
இன்று வீடுக்குள்ளே யானை சுகமாக இருக்கின்றது. இதை அனைத்தும் செய்த நீங்கள் உருப்படியாக இருக்கின்றீர்களா? நிம்மதியாக வாழ்கின்றீர்களா என இவர் கேள்வி எழுப்பினார்.
என்னை நேசிப்பவர்களின் பெயரை நான் உச்சரிப்பேன். குடுகாரர்களின் பெயரை உச்சரிக்க மாட்டேன்.
மாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் என்றால் எனது பெயரையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெயரையும் அவர்கள் உச்சரித்தே ஆக வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு கூட்டம் சேரும். காரணம் எனது பெயரை உச்சரித்து சொல்லப்படும் வார்த்தைகளுக்கே அந்த கூட்டம் வரும்.
நமது ஸ்தாபனம் மற்றும் எனது பெயர் நான் பரப்புவதை விட மாற்று கட்சியினர் தினமும் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். எதிர்காலத்தில் எனது பெயரை பச்சையும் குத்திக்கொள்வார்கள்.
சிலர் எமது ஸ்தாபன பாடசாலையில் அரசியல் கற்றவர்கள். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் நமது ஸ்தாபனத்திற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வந்தவர்கள் அடிப்பட்டு சென்று விட்டார்கள். இன்று அவர்கள் சென்ற இடத்திலும் அடிப்பட்டே வாழ்கின்றனர்.
ஆனால் ஒரு காலமும் இ.தொ.கா என்ற புனிதமான ஸ்தாபனம் அழிந்து போய்விடாது. அது வெட்ட வெட்ட துழுக்கும் ஸ்தாபனமாகும்.
ஆகவே எதிர்வரும் காலத்தில் குடு அற்ற நல்ல மலையகம் ஒன்றை உருவாக்குவதற்கு அணைவரும் ஒற்றுமையுடன் எம்மோடு செயற்படுங்கள் என்றார்.




