அமெரிக்க மக்கள் தொண்டு நிறுவனத்தின் மூன்று கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதியுதவியுடன் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கட்டிடத் தொகுதிகள் நேற்று வியாழக்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டன.
கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க தூதரக கல்வி, கலாசார விவகார பணிப்பாளர் ஜேம்ஸ் ரூசோ பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், பிரதி கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சர்ஜூன் அபூபக்கர் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த அமெரிக்க அதிகாரிகள், கல்லூரி சமூகத்தினரால் கல்முனை நகர நெடுசாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பெரும் வரவேற்பளிக்கப்பட்டனர். கல்லூரியின் நீண்ட கால தேவைகளை நிறைவேற்றி தந்தமைக்காக குறித்த அதிகாரிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாடசாலைக்கு உதவக் கிடைத்தமையையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் மாணவ சமூகத்தினர் நாட்டுக்கு சேவையாற்றக்கூடிய நற்பிரஜைகளாக மலர வேண்டும் எனவும் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்தும் உதவி வழங்குவோம் எனவும் அமெரிக்க தூதரக கல்வி, கலாசார விவகார பணிப்பாளர் ஜேம்ஸ் ரூசோ தெரிவித்தார்.
நிகழ்வில் அரங்கேற்றப்பட்ட இக்கல்லூரியில் கல்வி பயில்கின்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியொன்று அமெரிக்க அதிகாரிகளை பெரிதும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.