கல்முனை தமிழ் பிரிவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு கல்முனை மாநகரசபை ஆணையாளர் தொடர்சியாக வருவதில்லை. இதனால் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்ப் பிரிவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தவைவருமான கே.கோடீஸ்வரன் குற்றம் சாட்டினார்.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாயதுறை அமைச்சர் து.நவரெட்ணராஜா ஆகியோரது தலைமையில் (16) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச செயலாளர் எஸ்.கே.லவநாதன் உட்பட திணைக்களத் தலைவர்கள், பிரதேசமட்ட சமூக அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகரசபை ஊடாக தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு 2017 ஆம் ஆண்டு செலவு செய்யப்பட்ட நிதி தொடர்பான தகவலை பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் வினவிய போது குறித்த தகவலை ஆணையாளரிடமே கேட்க வேண்டும் என மாநகர சபையின் பொறியியலாளர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக மட்ட பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகள் மாநகரசபையோடு தொடா்புடையதாகவே இருந்தது. பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு மாநகர ஆணையாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ கூட்டத்திற்கு சமூகமளிக்காமையால் கடுமையாக ஆத்திரமுற்ற பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தை தொடர்ந்து நடாத்த முடியாமல் உள்ளது எனக்கூறி இடைநடுவில் கூட்த்தை கலைக்க தீர்மாணித்தாா் எனினும் கூட்டம் தொடர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
திணைக்களத்தின் தலைவர்கள் உட்பட இங்கு பலர் வருகை தந்திருக்கிறீர்கள். பொறுப்புவாய்ந்த ஆணையாளர் வருகை தராததால் பிரச்சினையை தீர்க்க முடியாமல் உள்ளது. இப்படியிருந்தால் இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் தேவையில்லை. இங்கு நீங்கள் எல்லோரும் சும்மா வந்திருக்கவில்லை. அரசாங்கத்திற்கு பல இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பொறுப்புக் கூறுவது யார்? கல்முனை, சாய்ந்தமருது, கல்முனை தமிழ்ப் பிரிவு ஆகிய மூன்று பிரதேச செயலகங்களுக்கும் அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தராக கல்முனை மாநகர சபை ஆணையாளர்இருக்கிறாா் ஆனால் அவர் தொடர்ச்சியாக தமிழ் பிரதேசத்தின் கூட்டத்தை பகிஷ்கரிப்பது தமிழ் மக்களை ஓரங்கட்டுவது போன்று உள்ளது.
திண்மக்கழிவு, வடிகான் துப்பரவு, வீதி அபிவிருத்தி, மின்சாரம், சிறுவர் பூங்கா, ஏனைய உட்கட்டமைப்பு எதுவானாலும் மாநகர சபையோடு தொடர்பு பட்டதாகவே உள்ளது. மாநகர சபையின் பரதிநிதிகள் கூட்டத்திற்கு வராமல் விடுவதால் தீர்வு கிடைப்பதில்லை. தகவலும் சரியாக கிடைப்பதில்லை. இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் ஊடாக கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட 32.5 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் அறிக்கை உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரனால் முன்வைக்கப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.