-தெ.கி. பல்கலைக் கழக உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜீம்-
பல்கலைக் கழகத்திற்கு பல கனவுளுடன் வரும் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று சிறந்ததொரு பட்டதாரியாக வெளியேறிச் செல்ல வேண்டும் என தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழக தொழிநுட்பவியல் பீடத்திற்கு தெரிவான 02 வது மாணவர் தொகுதியின் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.முகம்மட் தாரீக் தலைமையில் நடைபெற்றபோது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர், கடந்த 13 வருடங்களாக கஷ்டப்பட்டு பாடசாலை கல்வியினை முடித்து விட்டு பல கனவுகளுடன் பல்கலைக்கழகத்திற்குள் வந்துள்ளீர்கள். அந்த கனவு நனவாக வேண்டும். அதற்காகத்தான் பல்கலைக்கழக காலத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் பல்கலைக்கழக காலத்தில் உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பதையும், நீங்கள் எதிர்பார்ப்பதையும் அடைந்து கொள்வதற்காக தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி, விரிவுரையாளர்களினது வழிகாட்டல்களை சிறந்ததாக பயன்படுத்திக் கொண்டு உங்களது கனவை மெய்ப்படுத்த வேண்டும். உங்களது முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதுமான குறிக்கோள் சிறப்பாக கல்வி பெற்று பட்டதாரி ஆகுவதுதான். இந்த குறிக்கோளை அடைவதற்கு மாணவர்களான நீங்கள் செயல்படவேண்டும். இதிலிருந்து வேறு திசைகளுக்கு செல்லாமல் மிகவும் கவனமாக கல்வி கற்பதற்காக பல்கலைக்கழக காலத்தினை பயன்படுத்த வேண்டும்.
போராட்டம் என்றெல்லாம் உங்களை திசை திருப்பி பிழையாக வழிநடாத்த முயற்சிப்பார்கள் இதில் கவனமாக இருந்து வந்த நோக்கத்தை அடைவதற்காக உங்கள் கல்வியை தொடர வேண்டும். எந்த விடயத்திலும் ஏமாந்து விடாமல் கல்விக்கான உங்கள் காலத்தினை பூர்த்தி செய்து விட்டு சிறப்பாக பட்டத்தினை பெற்று உயர்வடைய வேண்டும். உங்கள் உயர்வுக்காக நாங்களும் தயாராக உள்ளோம் ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உபவேந்தர் நாஜீம் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பல்கலைக் கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், தொழிநுட்பவியல் பீடத்தின் Bio systems Technology திணைக்களத்தின் பகுதித் தலைவர் கலாநிதி பி.ஜி.என்.செவ்வந்தி Information and Communication Technology திணைக்களத்தின் தலைவர் எஸ்.எல்.அப்தூல் ஹலீம் உட்பட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.