காரைதீவு பிரதேசசபைக்காக நடைபெற்ற 3வது உள்ளுராட்சிசபைத்தேர்தலில் காரைதீவின் இருப்புக்காக இரண்டே இரண்டு மாதங்களில் உருவான சுயேச்சை அணிக்கு 2ஆயிரம் வாக்குகளை அளித்து மகத்தான மாபெரும் வெற்றியைத்தந்த மண்ணின்மைந்தர்களுக்கு எமது வாத்சல்ய நன்றிகளும் வாழ்த்துகளும்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத் தேர்தலில் சுயேச்சை அணியில் போட்டியிட்டு 1985வாக்குகளையும் 2ஆசனங்களையும் பெற்ற சுயேச்சை அணியின் தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவர் மேலும்கூறுகையில்:
பல தசாப்தங்களுக்கு முன்தோன்றிய பழம்பெரும்கட்சிகளான த.தே.கூட்டமைப்பு ஜல.சு.கட்சி ஜ.தே.கட்சி மு.கா போன்ற கட்சிகளின் மத்தியில் 2மாதங்களுள் உருவாகி 1மாதத்துள் பரப்புரை செய்ததன்பேரில்இந்த மண்ணில் பற்றுறுதி கொண்ட எமது மக்கள் எமக்கு 2000 வாக்குகளை எடுத்தஎடுப்பிலேயே வழங்கியுள்ளார்கள் எனும்போது இது எமக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
8000 தமிழ் வாக்காளர்களுள்ள காரைதீவில் பழம்பெரும்கட்சியான த.தே.கூட்டமைப்பிற்கு ஆக 3202 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. கடந்தகாலங்களைவிட குறைவான வாக்குகளே இது. மீதி 5000 தமிழ்மக்கள் எதிராகஉள்ளனரென்பது புலனாகின்றது. அமோகவெற்றியென்பது அறுதிப்பெரும்பான்மை எடுத்தவர்கள் கூறுவது.
எதுஎப்படியிருப்பினும் ஆட்சியமைக்கும் செயற்பாட்டில் எமது புதியவியூகம் இரண்டொரு நாட்களில் தெரியவரும். எமக்காக இரவுபகல் பாராது ஒத்துழைத்த அனைருக்கும் நன்றிகள் என்றார்.
நடைபெற்றுமுடிந்த தேர்தலில் இலங்கைத்தமிழரசுக்கட்சி 3202 வாக்குகளையும் சுயேச்சை-1 அணி 1985வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1684வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1522வாக்குகளையும் சுயேச்சை -2 அணி 829வாக்குகளையும் தமிழர்விடுதலைக்கூட்டணி 280வாக்குகளையும் ஜ.தே.கட்சி 203வாக்குகளையும் பெற்றுக்கொண்டன.
அதன்படி த.அ.கட்சி 4ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும் ஸ்ரீல.மு.கா. 2ஆசனங்களையும் ஸ்ரீல.சு.கட்சி 2ஆசனத்தையும் அ.இ.ம.காங்கிரஸ் 1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
