Raazi Muhammadh Jaabir-
பாம்புப் புற்று மெது மெதுவாக மழை பெய்து கரைந்து கொண்டிருக்கிறது.இறுதியில் அது தரைமட்டமாகிவிடும். அதற்குள் இருக்கும் பாம்புகள் எல்லாம் வேறு வழியின்றி இன்னொரு புற்றைத் தேடி ஓடிவிடும்.இம்முறை கிழக்கில் அந்தப் பாம்புகள் இனி புற்றமைக்க முடியாது.
அதே நேரம் புற்றுக்குள் இருந்த பாம்பை விரட்டிவிட்டு ஒரு நட்டுவக்காலியை கொண்டு வந்து அழகு பார்க்க முடியாது.பாம்புப் புற்று முழுவதுமாட் அழிய வேண்டும்.
பின்னர் பாம்பின் புற்றிருந்த தடங்கள்,பாம்பு ஊர்ந்த இடங்கள்,பாம்புச் சட்டைகள் அனைத்தையும் அகற்றி நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.
அதன் பிறகுதான் எமது அரசியல் எதிர்காலத்திற்கான விதையை நாம் விதைக்க வேண்டும். இறந்தகாலங்களை கூர்மையாகக் கவனித்து நாம் விட்ட தவறுகளில் இருந்து பாடங்களைப் படித்து முன்னேற வேண்டும். எமது பயணங்கள் அனைவரையும் சேர்த்த பிரதேசவாதம் களைந்த ஒரு நீண்ட பயணம்.
கிழக்கு அரசியல் இந்தத் தேர்தலில் ஒரு திருப்பத்தை அடையும் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அம்பாரையில் ஒன்று இரண்டைத் தவிர அனைத்து முஸ்லிம் பிரதேச சபைகளிலும் கூட்டாட்சி வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது.அல்லது தனிக்காட்டு ராஜாவாக நின்று கோலோச்சிய முஸ்லிம் காங்கிறஸ் இம்முறை தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை வரும்.இது எம்மைப் போன்று மாற்றரசியலை விரும்பும் மக்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் மாற்றம்.
இதுதான் தருணம். இந்தத் தேர்தலோடு அம்பாரை அரசியலில் ஒரு இடைவெளி விழும்.அந்த இடைவெளியை நல்லதொரு மாற்றரசியலுக்காக நாம் பயன்படுத்த வேண்டும்.
எமது கருத்தை எமது மக்களுக்கு எப்படிக் கொண்டு சேர்ப்பது? தினம் தினம் கூட்டம் போட முடியாது. மாற்றுக் கருத்துக்களை எப்படி மக்களிடம் சேர்ப்பது.
அதற்கு ஒரே வழி ஒரு நல்ல பத்திரிகையை ஆரம்பிப்பது.முஸ்லிம்களின் அரசியலைப் பேசும் ஒரு பத்திரிகை.எந்த அரசியல்வாதியின் சம்பளத்திலும் தங்கியிராத பத்திரைகை. இதை எழுதினால் வழக்குப் போடுவார்களோ என்று பயப்படாமல் போடட்டும் எதிர்கொள்வோம் என்று தைரியத்தோடு மக்களை நாடும் ஒரு பத்திரிகை. எந்த அரசியல் கொம்பனுக்கும் அடிபணியாத ஒரு பத்திரிகை எமக்கு வேண்டும். யுத்தத்தின் நடுவில் யாழ்ப்பாணத்தில் மஹிந்த அரசுக்கு ஒரு மாற்றுக் குரலாக நின்ற உதயன் போன்றதொரு பத்திரிகை எமக்கு வேண்டும்.முஸ்லிம் அபிலாஷைகளைப் பேசுவதற்கு எம்மிடம் ஒரு பத்திரிகை இல்லாமல் போனதும் எமது வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.
முஸ்லிம் அரசியலைப் பேசும் ஊடகங்கள் இன்னொரு பெரும்பான்மை ஊடகத்தில் ஒரு கிளையாகவே இருக்கிறது.அதில் தணிக்கைகள் அதிகம்.சுதந்திரமாக முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிப் பேசினால் சிங்களப் பேரினவாதத்தோடு இணைந்த ஊடகங்கள் எம்மை அதிகம் எழுத விடாது.
இதற்கு முஸ்லிம்களுக்கென்று சொந்தமாக, குறிப்பாக கிழக்கில் வெளிவரக்கூடிய கிழக்கரசியலை தீர்மானிக்கக் கூடிய ஒரு சக்தியாக அந்தப் பத்திரிகை இயங்க வேண்டும்.
ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது. பொருளாதாரம். அனைத்து நல்ல பத்திரிகைகளும் அழிந்து போகும் மையப் புள்ளிதான் பொருளாதாரம். சம்பளம் கொடுக்க வழியில்லாமல் ஒரு அரசியல்வாதியிடம் பிச்சை எடுத்துவிட்டு அவருக்கு ஒரு பத்திரிகை அல்லக்கையாக மாறுவதும் இந்தப் பொருளாதாரம் என்ற பலவீனத்தால்தான்.
ஒன்று சொந்தமாக எமக்கு ஒரு அச்சகம் வேண்டும் அல்லது 6 மாதங்களுக்குத் தடையில்லாமல் பிரசுரிக்கத் தேவையான பணபலம் வேண்டும்.
அதே நேரம் இந்தப் பணியை நாம் தாமதிக்கவும் முடியாது.
நல்ல எண்ணங்கள் தோல்வியடைவதில்லை என்ற நம்பிக்கையோடு நாள்கள் நகர்கின்றன.