எம்.எம். முஹம்மட் பைறூஸ்-
புதுப்பொலிவுபெறும் ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக கடமையேற்ற எச்.எம்.எம். ஹமீம் அவர்களின் பணிப்புரைக்கிணங்க, ஓட்டமாவடி பிரதான வீதி மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறச் சூழல் என்பன சபை ஊழியர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (05) சிரமதானம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.
ஓட்டமாவடி நகரின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பூங்கா என்பன கடந்த சில வருடங்களாக முறையாக பராமரிக்கப்படாமல் காணப்பட்டது. இதனை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச சபை செயலாளர் உடனடியாக சிரமதான வேலைகளை மேற்கொண்டு அழகுபடுத்துமாறு ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
மேலும், இப்பகுதியில் புதிதாக மரங்களை நட்டு அழகுபடுத்துவதற்கும் தேவையான அளவில் மின்னொளியூட்டுவதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களது நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இம்மணிக்கூட்டுக் கோபுரம் ஓட்டமாவடி பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

