எம்.ஜே.எம்.சஜீத்-
தேர்தல் வந்தால் மாத்திரமே வில்பத்து நாடகம் அரங்கேற்றப்படுவதாகவும், இது முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு சூழ்ச்சித்திட்டமாகும் எனவும் வேட்பாளர் பாரிஸ் முகைதீன் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக குதிரைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பாரிஸ் முகைதீன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்...
வில்பத்து பிரச்சினை தொடர்பில் அண்மைக்காலமாக சமூக வலயத்தளங்களில் சில பதிவுகளை அவதானிக்க முடிந்தது. தேர்தல்கள் வருகின்ற போது மாத்திரமே இவ்வாறான பதிவுகளை காணமுடிகிறது. இது தேர்தல்களை மையமாக வைத்தே அரங்கேற்றப்படுகின்ற ஒரு நாடமாகும்.
முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களில் மக்கள் அவதானமாக இருக்கின்றனர். வில்பத்து பிரச்சினைகளை கூறி வாக்குகளைப் பெற்ற காலம் முடிந்துவிட்டது. இனிமேலும் இவ்வாறான சூடேற்றுகின்ற போலி வார்த்தைகளை வைத்து மக்களுடைய வாக்குகளை சூறையாட முடியாது.
சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களுக்கென்று பல இணையத்தளங்களையும், முகநூல் பக்கங்களையும் வைத்துக்கொண்டு வாக்குகளை சுவீகரிப்பதற்காக போலிப்பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சமூகத்தை சரியான பாதையில் வழிநடாத்த வேண்டியவர்கள் இன்று பதவிகளுக்காக இளைஞர்களை பிழையாக வழிநடாத்திக்கொண்டிருக்கின்றனர்.
போலி வாக்குறுதிகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கின்ற அரசியல் தலைவர்கள் இன்று உலமாக்களையும் இணைத்துக்கொண்டு தேர்தலில் குதித்துள்ளனர். குர்ஆண் ஹதீஸை தூயவடிவில் கற்றுக்கொண்ட உலமாக்கள் போலி தலைமைகளுடன் கைகோர்த்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முனைவது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் ஆபத்தாகும். அட்டாளைச்சேனை மண்ணையும் மக்களையும் ஏமாற்றிய கடந்த கால வரலாறுகளை அந்த உலமாக்கள் ஒருதடவை மீட்டுப்பார்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எமது பிரதேச அரசியல் தொடர்பில் இளைஞர்கள் மிக்க அவதானம் செலுத்த வேண்டும். தேர்தல் காலங்களில் வந்துத போலி வாக்குறுதிகளை கூறி எமது வாக்குகளை இன்னும் சூறையாடிச் செல்வதனை அனுமதிக்க முடியாது. எமது பிரதேசம் அரசியல் ரீதியாக போலி தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பி பல தடவைகள் ஏமாந்த வரலாறுகள் ஏராளம். எனவே கடந்த காலங்களில் விட்ட தவறுகளைப் போன்று இம்முறையும் நாம் செயற்ப முடியாது.
அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் காங்கிரசை ஆதரித்து ஆனபலன் ஒன்றுமில்லை. பல வருடங்கள் ஏமாற்றடைந்து எமது மக்கள் களைத்துப்போன இக்காலகட்டத்தில் நான்தான் சத்திய தலைவன் எனும் கோசத்துடன் மற்றுமொருவர் வருகிறார். இவர்களினால் எமது சமூகத்திற்கோ அல்லது பிரதேசத்திற்கோ எந்தவொரு விமோசனமும் கிடையாது என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பதவிகளுக்காகவும், பணத்துக்காகவும் சோரம் போன சிலர் இன்று தலைவர்கள் எனும் போர்வையில் சிலரைக் கொண்டு வந்து அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுடைய வாக்குரிமைகளை விற்பதற்கு துணைநிற்கின்றனர். இவர்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளையே மேலும் செய்துகொணடடிருக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.