சாய்ந்தமருதின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாபீர் பௌண்டேசன் தேர்தலில் களமிறங்கவில்லை!!! - பௌண்டேசனின் ஸ்தாபகர் நாபீர்-






எம்.வை.அமீர்-

ம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் உள்ள சகல உள்ளுராட்சிசபைகளுக்கும் நாபீர் பௌண்டேசன், வேட்பாளர்களைக் களமிறக்க நீண்ட காலமாக திட்டமிட்டு வேட்பாளர் பட்டியல்களையும் தயார் செய்திருந்த நிலையில் தனது தாயகமான சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையக் கருத்தில்கொண்டு அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இம்முறை உள்ளுராட்சிசபைத் தேர்தல்களில் குதிப்பதில்லையென தங்களது அமைப்பு தீர்மானித்துள்ளதாக 2017-12-16 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான பிரத்தியோக சந்திப்பு ஒன்றில் நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் ஈ.சி.எம். நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சமூக சிந்தனையாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் அமைந்துள்ள ஈ.சி.எம். நிறுவனத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அல் ஹாஜ் நாபீர், தங்களது நாபீர் பௌண்டேசன், இப்பிராந்திய மக்களின் தேவைகளை அறிந்து மிக நீண்டகாலமாக பணியாற்றி வருவதாகவும் கணிசமான அளவு இளைஞர்களும் ஏனையோரும் தங்களது அமைப்பில் பரவலாக இணைந்துள்ளதாகவும் அவர்களது அபிலாஷையின் அடிப்படையிலேயே தாங்கள் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சாய்ந்தமருதில் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்களில் தானும் முன்னின்று செயற்பட்டதாகவும் அதன்பயனாக சாய்ந்தமருதுக்காக பிரதேச செயலகம் ஒன்றைப் பெற்றதாகவும் சாய்ந்தமருதின் எல்லை நிர்ணய விடயங்களிலும் தான் சாட்சியமளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

கேள்வியொன்றுக்கு பதிலளித்த நாபீர், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இருப்பதாகவும் இதனை அவர்கள் விரைந்து பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாட அமைச்சர் றிஷாட் பதியூதீன் முனையக்கூடாது என்றும் அவர்களே இந்த விடயத்தை பிரச்சினையாக்கியவர்கள் என்றும் தெரிவித்தார்.

றிஷாட் ஹசனலி கூட்டு தொடர்பாக கருத்துத் தெரிவித்த நாபீர், இன்னொரு கட்சியில் இருந்து அடையாளம் இன்றி வெளியேறியவர்களுடன் 33000 ஆயிரம் வாக்குகள் தங்களிடமிருப்பதாகக் கூறும் றிஷாட் அணியின் வங்குரோத்துத் தன்மையை இந்த கூட்டு காட்டுவதாகவும் இது நீண்ட காலத்துக்கு இது நிலைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சம்மாந்துறையின் தேர்தல் நிலவரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போது எல்லைப் பிரிப்பு விடயத்தில் சம்மாந்துறைக்கு பாரிய அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அநீதியிழைக்கப்படுவதற்கு பிரதான காரணம் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் நௌஷாட் என்றும் பாரிய அநீதியைச் செய்துவிட்டு இந்த மக்கள் மத்தியில் மீண்டும் அவர் தேர்தலில் குதித்துள்ளதாகவும் சம்மாந்துறையின் மீது உண்மையாக அக்கறையுள்ள எவரும் இவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் தேர்தலில் நாபீர் பௌண்டேசன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவிப்புக்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -