அகமட் எஸ். முகைடீன்-
பொத்துவில் பிரதேசத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள சகல வசதிகளும் கொண்ட தேசிய தரம் வாய்ந்த பொது விளையாட்டு மைதானத்தின் அமைவிடம் தொடர்பான கலந்துரையாடல் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம். முஷரப் தலைமையில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பொத்துவில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஷித், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, விளையாட்டு உத்தியோகத்தர் சாந்தன், பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தேசிய தரம்மிக்க பொது விளையாட்டு மைதானத்தை பிரதேச செயலாளரினால் அடையாளப்படுத்தப்பட்ட பொத்துவில் ஆத்திமுனை பிரதேசத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் குறித்த அமைவிடம் தொடர்பில் பொத்துவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டன. இதற்கு தீர்வுகாணும் வகையில் இக்கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அம்மைதான அமைவிடத்திற்கு பொருத்தமான இடங்களாக ஆத்திமுனை, பாலேந்தி வட்டை, பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் காணி என்பன விளையாட்டுக் கழகங்களால் முன்மொழியப்பட்டன. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் முன்மொழியப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டு குறித்த மைதான அமைவிடம் தொடர்பான இறுதி முடிவினை தனக்குத் தெரியப்படுத்துமாறு பிரதேச செயலாளரை கேட்டுக்கொண்டார்.
மேலும் சகல விளையாட்டுக் கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பொத்துவில் கடின பந்து சிரேஷ்ட விளையாட்டுக் கழகம் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக பொத்துவில் கனிஷ்ட விளையாட்டுக் கழகம் என்பவற்றை ஆரம்பிக்குமாறு பிரதி அமைச்சர் ஆலோசனை வழங்கினார். அத்தோடு அவ்வாறு உருவாக்கப்படும் கழகங்களுக்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்களை வழங்குவதாகவும் அதற்கான பயிற்சி முகாம்களை பொத்துவிலில் நடத்துவதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு மென்பந்து விளையாட்டு உபகரணங்களை அடுத்த வாரமளவில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.