உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக ஜனாதிபதியையோ பிரதமரையோ அமைச்சர்களையோ மாற்றி விட முடியாது

மு.இராமச்சந்திரன் -

டைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களை மாற்றி விட முடியாது. குறிப்பட்ட பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்து பிதேச நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியுமே தவிர அரசாங்கத்தை மாற்றி விடவும் முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைமைப்பாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

டிக்கோயா மணிக்கவத்தை தோட்டம் 2 ஆம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு சுமார் 2 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த முருகன், வள்ளி, தேவயானை வெண்கலச் சிலைகளை ஆலய நிர்வாக சபையினரிடம் அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் சங்கத்தின், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன், முன்னாள் பிதேச சபை உறுப்பினர் எஸ். கல்யாணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில்,

சில வருடங்களுக்கு முன்னர் இந்தத் தோட்டத்துக்கு குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கத்தைத் தவிர வேறு யாரும் வர முடியாத நிலை இருந்தது. எனினும், தொழிலாளர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவர்கள் எந்த விதமான அபிவிருத்தியையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. சகல தொழிற்சங்கங்களும் வந்து போகக் கூடிய சூழல் நிலவுகின்றது. அதனால், அடுத்த ஜனவரி மாதத்தில் 25 வீடுகளைக் கொண்ட கிராமம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் யாரும் பெற்றுக் கொடுக்காத காணி உரிமையை எமது அமைச்சர் திகாம்பரம் பெற்றுக் கொடுத்து வருகின்றார்.

கடந்த காலங்களில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி அமைச்சர்களாக இருந்தவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை முறையாகப் பயன்ன்படுத்தி அபிவிருத்தி வேலைகளைச் செய்யத் தவறியதால் குறிப்பிட்ட நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், அமைச்சர் திகாம்பரம் ஒரு சதத்தைக் கூட திருப்பி அனுப்பாமல் மக்களுக்கு செலவு செய்த காரணத்தால் பிரதமரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இது மலையக அரசியலுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய கௌரவம் ஆகும்.

எமது அமைச்சர் கட்சி ரீதியாகவோ, தொழிற்சங்க ரீதியாகவோ செயற்படுவதில்லை. பாதிக்கப்படும் அனைத்து மக்களும் எமது உடன் பிறப்புகளே என்ற உணர்வோடு செயற்பட்டு வருகின்றார். அந்த வகையில் கடந்த வாரம் அட்டன் பிரதேசத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு உடனடியாக கூரைத் தகடுகளை வழங்கவும், பின்னர் வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் தீர்மானித்து என்னை அனுப்பி வைத்திருந்தார். ஆனால், குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கத்தின் தூண்டுகோளினால், அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் எமது கூரைத் தகரங்களை பெற்றுக் கொள்ள முடியாமற் போய் விட்டது. இத்தகைய அநாகரிகமான செயற்பாடுகள் எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவனவாக அமைந்து வருகின்றன என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் ரீதியில் கிடைக்கின்ற உதவிகள் யார் மூலமாகக் கிடைத்தாலும், அவற்றைப் பெற்றுக் கொள்ள மக்களை வழிப்படுத்துவதே உண்மையான அரசியல் பண்பாகும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களை மாற்றி விடவும் முடியாது. உள்ளூராட்சித் தேர்தல் மூலம் உடனடியாக ஆட்சியை மாற்றி விடப் போவதாக சில அரசியல்வாதிகள் மக்களை திசை திருப்பி வருகின்றார்கள். இதை நம்பி மக்கள் ஏமாந்து விடக் கூடாது. பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதன் ஊடாக பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளைத்தான் மேற்கொள்ள முடியும். எனவே, அரசியல் ரீதியில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எமது அமைச்சர் திகாம்பரம் அரசாங்கத்தின் நிதிகளைப் பெற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றார். அதற்கேற்றபடி உறுப்பினர்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

மேலும், இன்று வழங்கப்பட்டுள்ள முருகன், வள்ளி, தேவயானை சிலைகளை உரிய முறையில் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். சாமியை வழிபடுவது போல பாசாங்கு செய்து, அக்கிரமங்களை மேற்கொள்ளும் சில ஆசாமிகளைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். அத்தகைய மோசமான கலாசாரம் மலையகத்திலும் பரவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூய்மையான அன்போடு ஆன்மிக வழியைப் பின்பற்றி எமது எதிர்காலச் சந்ததியினரை நல்வழிப் படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்தத் தோட்ட மக்களின் நலன்கருதி, மிகவும் மோசமாகவுள்ள போக்குவரத்துப் பாதை எனது நிதியிலிருந்து 5 இலட்ச ரூபா செலவில் “கொங்கிரீட்” போட்டு செப்பனிடப்படவுள்ளது. அதேபோல், மேலும் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -