சாய்ந்தமருதில் நீண்டகாலமாக பொதுச் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தேங்கி கிடந்த குப்பை கூழங்களையும் அசுத்த நீரினையும் மிக குறுகிய நேரத்திற்குள் அகற்றி மக்கள் பணியில் தான் தொடர்ந்தும் அதிக அக்கறையுடன் இருப்பதை நிரூபித்துக் காட்டினார், நாற்பத்தைந்து நாட்களுக்குள் நாகரீக அரசியல் செய்து கல்முனை மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் லங்கா அசோக் லேலண்ட் PLC நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி.சிறாஸ் மீராசாஹிப் அவர்கள்.
சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு பின்னால் அமைந்துள்ள தாமரைக் குளத்தின் நீர், சாய்ந்தமருது கரைவாகு ஆற்றைச் சென்றடையும் பிரதான கால்வாயை குப்பைகள் மூடியிருந்ததோடு நீர்த்தாவரங்களினாலும் மூடப்பட்டு நீர் தேங்கியிருந்தமையால் சுகாதார சீர்கேடாக மாறி வந்தது.
குறித்த குளத்தை அண்டியதாக சாய்ந்தமருது மழ்ஹறுல் ஷம்ஸ் மகா வித்தியாலயம், மாவட்ட வைத்தியசாலை, சமுர்த்தி வங்கி, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயம், கிராமிய தொழிற்பயிற்சி நிலையம் என்பன அமைந்துள்ளதுடன் பல குடியிருப்புக்களும் வர்த்தக நிலையங்களும் அமைந்துள்ளன.
அசுத்த நீர் தேங்கி குப்பை கூழங்களும் நிறைந்திருந்தமையால் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கும், துர்நாற்றத்திற்கு மத்தியில் போக்குவரத்துச் செய்து வந்தனர்.
குளத்தின் மேலதிக நீர் வழிந்தோடும் கால்வாய் மூடப்பட்டுள்ளதன் காரணமாக கடந்த காலங்களாக பெய்துவரும் பெருமழையினால் குளத்தினை சென்றடையும் கழிவுநீர் கால்வாய்களும் நீர் வழிந்தோட முடியாதவாறு தடைப்பட்டிருந்தது. இதனால் இங்குள்ள குடியிருப்புகளிலும் வீதிகளிலும் நீர்தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாகவும் இருந்து வந்தது.
இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக் காட்டப்பட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் இன்று 2017.11.28 இலங்கை இளைஞர் கூட்டமைப்பின் (Youth Alliance Sri Lanka - YASL) தலைவரும் அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான இஸட்.எம்.ஸாஜித், கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு (காலை 10.30 மணி) விடயத்தை கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து மிக துரிதமாகச் செயற்பட்டு கல்முனை மாநகர ஆணையாளரை தொடர்புகொண்ட சிறாஸ் மீராசாஹிப் குறித்த சுகாதார சீர்கேட்டை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்கோள் விடுத்தார்.
சிறாஸ் மீராசாஹிப் அவர்களின் வேண்டுகோளை கவனத்திலெடுத்த ஆணையாளர் தமது உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு உரிய வேலையை செய்யுமாறு பணிப்புரை வழங்கினார். அதனடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த உத்தியோகத்தர்கள் அதனைப் பார்வையிட்டு கனரக இயந்திரம் மற்றும் கழிவகற்றல் வாகனங்களின் உதவியுடன் குப்பை கூழங்களை அகற்றி அந்தக் குளத்தினை சுத்தம்செய்து மழைநீர் வழிந்தோடுவதற்கும் வெள்ளப்பெருக்கிலிருந்து குறித்த பிரதேசத்தை பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் (பகல் 12.30 மணி) மேற்கொள்ளப்பட்டது.
அரசியல் அதிகாரம் எதுவுமில்லாத நிலையிலும், நீண்டகாலமாக நிலவிவந்த சுகாதார சீர்கேட்டை சீர்செய்து தந்தமைக்காக அந்தப் பிரதேச மக்கள் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் எமது இலங்கை இளைஞர் கூட்டமைப்பின் கோரிக்கையை மிக விரைவாக நிறைவேற்றி மக்களின் சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுவரும் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்களுக்கு எமது அமைப்பு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
மேலும், இந்த விடயத்தை மிகச் சிறப்பாக மிகத் துரிதமாக செய்துதந்தமைக்காக கல்முனை மாநகர ஆணையாளருக்கும் எமது அமைப்பு விஷேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தாமரைக்குளம் குப்பை மற்றும் நீர்த்தாவரங்கள் நிறைந்து நீர்தேங்கி காணப்படும் படங்களையும் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் நேர்த்தியாக காட்சியளிப்பதையும் படங்களில் காணலாம்.


