தமிழ் மக்களின் விடுதலைக்காக ஊடகச் சமராடிய உத்தமர் கோபுவை தமிழர்கள் இழந்து நிற்கின்றோம்



மிழ் மக்களின் அவலங்களையும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் துணிவுடனும் தளராதும் வெளிக்கொண்டு வந்த சிரேஷ;ட பத்திரிகை ஆசிரியர் எஸ்.எம்.ஜி. கோபலரட்ணம் அவர்களை (கோபு ஐயா) எமது மக்கள் இழந்துள்ளனர். அவரது வாழ்க்கைப் பயணம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பிரதானமானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

சிரேஷ;ட பத்திரிகையாளர் எஸ்.எம்.ஜி. கோபாலரட்ணம் அவர்களது மறைவு குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களின் பிரச்சினைகள், மற்றும் அவர்கள் மீதான ஒடுக்கு முறைகள், அவ் ஒடுக்கு முறைகளின் வாயிலாக எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களை அரசுகளின் தடைகளைத் தாண்டி வெளிக்கொண்டு வந்த சுதந்திர நாயகனாகவே கோபு உள்ளார். போர்க்கால அவலங்களின் உண்மைகள் மறைக்கப்படக்கூடாது என்பதற்காக கோபு ஐயா போராடினார்.

துப்பாக்கிகளுக்கும், சிறைவாழ்க்கைக்கும் அவர் அஞ்சவில்லை. பேனா என்ற ஆயுதத்தினைக் கையில் ஏந்திய ஓர் போராளியாகவே எம் விடுதலைக்காக உழைத்தார். அவரின் பேனா சுடுகலன்களை கண்டு அஞ்சவில்லை. தான் ஊடகத்துறையில் எதிர்கொண்ட சவால்களை அவர் எப்போதும் அனுபவமாகவே எடுத்துக்கொண்டார் என்பதை நான் அவருடன் பழகிய தருணங்கள் வாயிலாக மீட்டுப்பார்க்கின்றேன். இவ்வாறான ஆளுமையினை இழந்து நிற்கின்றோம்.

1953 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பத்திரிகைத்துறைக்கு பங்காற்றுவதில் இருந்து அவர் ஓய்வெடுக்கவில்லை. இவ்வாறான ஊடக ஜாம்பவான் ஒருவரையே தமிழ்த் தேசம் இழந்து நிற்கின்றது. 1960 ஆம் ஆண்டுகளில் ஈழநாடு பத்திரிகையில் செய்தி ஆசிரியராக இணைந்துகொண்ட அவர் அப் பத்திரிகையின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகள் பாடுபட்டார். அப் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக அரும்பாடுபட்டார். தொடர்ந்து காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளில் பிரதம ஆசிரியராக உழைத்தார். 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவந்த தினக்கதிர் பத்திரிகையின் ஆரம்பத்திற்காக பணியாற்றினார்.

ஈழமுரசு பத்திரிகையில் 1983 இல் ஆசிரியராக பணியாற்றிய சமயம் சிறை வாழ்க்கையினைக் கூட அவர் அனுபவித்தாகவேண்டியிருந்தது. இவ்வாறாக இனத்தின்பால் கரிசனைகொண்டு மகோன்னத பணியைத் திறன்பட ஆற்றிய ஓர் ஊடகக் குருவை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றனர். பத்திரிகைப் பணி என்பது யுத்த காலத்தில் ஒன்றும் சாதாரணமானதல்ல. அதுவும் ஒரு தமிழ் உணர்வுள்ள ஊடகனாகப் பணியாற்றுவது மிகவும் ஆபத்து மிக்கது என்பதை உணர்ந்திருந்தும் அர்ப்பணித்துப் பணியாற்றிய எஸ்.எம்.ஜி.யின் வாழ்க்கைப் பயணம் இனத்திற்கு பலமாக அமைந்தது.

ஈழமண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற ஆசியர் தலையங்கங்களின் தொகுப்பு, பத்திரிகைத்துறையில் அரைநூற்றாண்டு, ஈழம் ஓர் முடிவில்லாப் பயணம் போன்ற நூல்கள் அவரின் ஊடக வாழ்க்கையின் அனுபவங்களையும் ஆளுமைகளையும் சொல்லி நிற்கின்றன.

கடந்த சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரால் கிளிநொச்சியில் வைத்து பத்திரிகை ஆசிரியர் கோபு அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அக் கௌரவத்தினை ஏற்றுக்கொண்டு இளம் ஊடகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்கான பொறிமுறையை நிறுவும்படி அங்கு அவர் கேட்டிருந்தார். ஆகவே நேற்று உயிர் பிரியும் வேளையிலும் எஸ்.எம்.ஜி.யின் மூச்சு காத்திரமான தமிழ் ஊடகத்துறை என்றே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -