காங்கேயனோடையிலிருந்து காத்தான்குடி ஊர் வீதி வழியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் பஸ் ஒரு மாதகாலமாக போக்குவரத்து செய்யப்படாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளதையிட்டு அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரிகங்களை எதிர்நோக்குகின்றனர்.
மட்டக்களப்பு நைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளும், பார்வையிடுவோரும் மேற்படி பஸ்ஸிலேயே பயணிப்பதுடன் அலுவலகங்கள் மற்றும் மட்டக்களப்பிற்கு நகரத்திற்கு வேலை நிமித்தம் செல்லும் இப்பகுதி மக்கள் பெரும் நன்மையடைந்தனர்.
இது விடயமாக காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளரிடம் வினவப்பட்டபோது சேவையில் ஈடுபட்ட பஸ் பழுதடைந்துள்ளதால் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வீதியால் சிறிய பஸ்ஸே செல்லமுடியும் எனவும் பெரிய பஸ்ஸினை சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் மேற்படி பழுதடைந்த பஸ்ஸிற்கு மாற்றீடாக வேறொரு பஸ்ஸை போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டியது காத்தான்குடி பஸ் டிப்போவின் கடமையாகும் எனவும் தாம் இது தொடர்பில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
