அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கருத்தறியும் கூட்டம் மூடுமந்திரமாகவே நடந்தது! -காரைதீவு முன்னாள் தவிசாளர்

மாகாண சபை தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவால் அம்பாறை மாவட்டத்துக்கான எல்லை நிர்ணயம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தறியும் கூட்டம் மூடுமந்திரமாக இடம்பெற்று முடிவடைந்து உள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.

இது தொடர்பாக இவர் ஊடகங்களுக்கு விடுத்து உள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பவை வருமாறு:-

அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துகளை செவிமடுக்கிறார்கள் என்கிற போர்வையில் அம்பாறை மாவட்டத்தில் பேய் காட்டுகின்ற கூட்டம் ஒன்றையே ஜனாதிபதி ஆணைக்குழு நடத்தி உள்ளது

ஏனென்றால் இக்கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெறுவதாக ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட பகிரங்க அறிவித்தலில் தெரியப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் இக்கூட்டம் அதே நாளில் அதிகாலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெற்று உள்ளது. இதில் சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளே பங்கேற்று உள்ளன. குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுக்கு மேலதிகமாக தற்போதைய அரசாங்கத்துக்கு முட்டு கொடுக்கின்ற, முஸ்லிம்களிடம் கிழக்கு மாகாணத்தை அடகு வைக்கின்ற தமிழரசு கட்சியும், தமிழரசு கட்சிக்கு முட்டு கொடுக்கின்ற அரசியல்வாதிகளும் பங்கேற்று உள்ளனர் என்பதை பத்திரிகை செய்திகள் மூலமாக மறுநாள் அறிய முடிந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் நடத்தப்படுகின்ற சரியான துல்லியமான நேர விபரம் எவ்வாறு தெரிந்து உள்ளது? என்கிற கேள்விக்கு நாம் விடை காண முயல்கின்றபோது இக்கூட்டத்தை ஒழுங்கு பண்ணி நடத்தியவர்களும், இதில் பங்கேற்றவர்களும் கூட்டு கள்வர்கள் என்றே நாம் கொள்ள வேண்டி உள்ளது.

எனவே அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டம் ஒழுங்கான முறையில் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும். இதற்கு உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி உள்ளதுடன் கடிதத்தின் பிரதியை நடவடிக்கைக்காக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அனுப்பி உள்ளேன்.

மேலும் நடந்து முடிந்த கூட்டத்தில் நான் பங்கேற்க முடியாமலும், எனது கருத்து முன்வைக்க முடியாமலும் செய்யப்பட்டதால் எனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு உள்ளதால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் நாளை வியாழக்கிழமை முறைப்பாடு மேற்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -