அகமட் எஸ். முகைடீன்-
தெஹியத்தகண்டி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்யும்வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (10) வெள்ளிக்கிழமை தெஹியத்தகண்டி பிரதேசத்திற்கு நேரடி விஜயம்செய்து இப்பிரதேச மைதானங்களை பார்வையிட்டு அவற்றை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின்போது பிகிரிசொரவ்வ, துவாரகல, சூரியபொக்குன, புசல்லாவின்ன, சந்தமடுள்ள, பக்மீதெனிய, ஹுங்கமலகம மற்றும் மடகம ஆகிய கிராமங்களில் உள்ள மைதானங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டு மைதான செப்பனிடல், மைதானத்திற்கு வடிகான் மற்றும் வலையிலான சுற்று மதில் அமைத்தல் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்ததோடு குறித்த மைதானங்களுக்கான வேலைத்திட்டம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தரை பணித்தார்.
மேலும், இச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரது குடும்பத்திற்கு நீர் சுத்திகரிப்பு தாங்கி ஒன்று பிரதி அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது தெஹியத்தகண்டிய பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் டப்லியு.எஸ்.ஏ. ஜயலத், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் அம்பாறை மாவட்ட சிங்கள பிரதேசங்களுக்கான இணைப்பாளர் எம்.எஸ்.எம். ரஊப், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தகண்டிய பிரதேச செயற்பாட்டாளர்கள், பிரதேச விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.