காரைதீவை சம்மாந்துறைத் தொகுதியுடன் இணைத்தமைக்கு விசனம்!

காரைதீவு நிருபர் சகா-

னாதிபதி நியமித்த மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயக்குழுவிற்கு அம்பாறை மாவட்டம் சார்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சமர்ப்பித்த முன்மொழிவில் காரைதீவுப்பிரதேசத்தை சம்மாந்துறைத்தொகுதியுடன் இணைத்தமை தொடர்பில் பாரிய விமர்சனங்களை காரைதீவின் பொதுநல அமைப்புகளும் பொதுமக்களும் வெளியிட்டுவருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் அமையவிருக்கும் உத்தேச 07தொகுதிகளுக்கான இம்முன்மொழிவு கடந்தவாரம் அம்பாறைக்கச்சேரியில் இடம்பெற்ற எல்லைநிர்ணயக்குழுவிடம் இலங்கைத்தமிழரசுக்கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்தலைமையிலான குழுவினர் கையளித்து சமர்ப்பணம் செய்திருந்தனர்.

இக்குழுவில் காரைதீவைச்சேர்ந்த அக்கட்சியின் முக்கியஸ்தர்களோ யாரோ அழைத்துச்செல்லப்படவில்லை என்பதற்கு அப்பால் காரைதீவை சம்மாந்துறைத்தொகுதியுடன் இணைப்பது தொடர்பாக காரைதீவு மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றன.

தங்களிடம் கேட்காமல் கலந்துரையாடாமல் தங்களை சம்மாந்துறைத் தொகுதியுடன் இணைக்க இவர்கள் யார் என்ற கேள்வியையும் அந்த மக்கள் கேட்கின்றனர்.

இம்முன்மொழிவு தயாரிக்கையில் காரைதீவைச்சேர்ந்த த.தே.கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்களா என்பது தொடர்பில் ஊர்மத்தியில் பரவலான கருத்துக்கள் அடிபடுகின்றன. இது ஊர்மத்தியில் பூதாகரமான பிரச்சினையாகக் கிளம்பிவருகின்றது.

இது தொடர்பாக காரைதீவுப் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தருமான வை.கோபிகாந்திடம்(வைகோ) கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

காரைதீவைச் சம்மாந்துறையுடன் இணைப்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.அம்பாறையில் இதனைச்சமர்ப்பித்ததுகூட எனக்குத் தெரியாது.

இது தொடர்பாக என்னிடம் கட்சியைச்சேர்ந்த யாரும் கதைக்கவில்லை. காரைதீவின்தேர்தல் தொடர்பான ஒருகூட்டமொன்றில் இது பற்றி இன்னுமொரு பிரமுகர் பேசும்வரை இது விடயம் எனக்குத் தெரியாது.

இது சம்பந்தமாக எங்களுடைய ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூட எம்மிடம் இதுபற்றி எதுவுமே கதைக்கவில்லை.

கல்முனையை நான்காகப் பிரிக்கும் விவகாரம் தொடர்பாக அவர் கல்முனைக்குச்சென்று அந்த தமிழ்மக்களிடம் கலந்துரையாடி அவர்களது ஏகோபித்த முடிவை தீர்மானத்தைக் கேட்டறிந்தது போன்று காரைதீவு தொடர்பான முடிவை எடுக்கும்போது கட்டாயம் இங்குவந்து எமது காரைதீவு மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்திருக்கவேண்டும்.

ஆனால் இங்கு எதுவுமே நடக்கவில்லை. அதனால் ஊர்மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட அபிப்பிராயபேதங்களும் நாம் இதற்கு உடந்தை போன்ற வீண்கதைகளும் அடிபடுகின்றன. இது எமக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவுமிருக்கின்றது என்றார்.

கட்சியின் காரைதீவுப்பிரதேச அமைப்பாளரான கி.ஜெயசிறில் ஊர்ப்பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் கூறுகையில்:
காரைதீவை சம்மாந்துறைத்தொகுதியுடன் இணைக்கும் செய்தியை இங்குதான் முதன்முதல் கேள்விப்படுகின்றேன். வெட்கப்படுகி;றேன்.
நான் கட்சியின் காரைதீவு அமைப்பாளராகவிருந்தும் இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. யாரிடமும் கலந்துரையாடியதாக கேள்விப்படவுமில்லை.

ஊர்மக்களின் சம்மதத்தைப் பெற்றபிற்பாடு இம்முடிவை எடுத்திருக்கவேண்டும். இல்லாவிடில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாகிய எம்மிடமாவது இதுபற்றிக்கலந்துரையாடி இம்முடிவை எடுத்திருந்தால் பிரச்சினை இல்லை.

இம்முன்மொழிவு சமர்ப்பிக்கும் தினத்தன்று நான் முன்னாள் மாகாணசபை உறுப்பினரைத் தொடர்புகொண்டு கேட்டபோது துரைராஜசிங்கம் ஜயா வருகிறார்.நாங்கள்போகிறோம் என்றுமட்டும் கூறினார்.
மாறாக காரைதீவு சம்மாந்துறையுடன் இணைத்தவிடயமோ அல்லது வாருங்கள் போவோம் என்றோ ஒரு வார்த்தையும் கூறவில்லை.
காரைதீவுக்குரிய அமைப்பாளராக நானிருந்தும் இதுவிடயம் தெரியாதது குறித்து வெட்கப்படுகின்றேன்.

ஆனால் இன்று கட்சி சார்பாக பல்வேறு விதமாக மக்கள் பேச ஆரம்பித்துள்ளமை வேதனையளிக்கின்றது என்றார்.
காரைதீவு அறங்காவலர் ஒன்றியச் செயலாளரும் காரைதீவு மகாசபைத்தலைவருமான சி.நந்தேஸ்வரனிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில எமது காரைதீவுக்கிராமம்; வித்தியாசமான பூகோளரீதியில் அமையப்பெற்றுள்ளது. எமது காரைதீவு மண் தொடர்பான தீர்மானத்தை அல்லது முடிவை காரைதீவு மக்களிடம் கேட்டு அல்லது அந்தக்கட்சி சார்ந்த முகவர்களிடம் கேட்டாவது முன்மொழிவைத் தயாரித்திருக்கவேண்டும்.

ஊர்ப்பொது அமைப்பான எங்களிடமும் கேட்காமல் கட்சிசார்ந்தவர்களிடமும் கேளாமல் எமது மண்ணின் எதிர்காலத்தை இன்னுமொருவர் தீர்மானிப்பதை நாம் ஆட்சேபிக்கின்றோம்.
நாம் இருந்தமாதிரி பொத்துவில் தொகுதியுடனிருப்போம் இன்றேல் கல்முனைத்தொகுதியுடனிருப்போம். அதனைக்கூட நாம் எமது மக்கள் தீர்மானிக்கவேண்டும்.

நாம் எந்தக்கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் எமது மண்சார்ந்த பிரச்சனைகளை நாமே முதலில் கையாளவேண்டும். எமது பிரதேசத்தின் சமகால களநிலைவரத்தையறிந்துதான் இம்முறை நாம் உள்ளுராட்சித்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -