அரசியல் சதிகாரர்களின் சுயலாப நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் உணர்ச்சிவசப்படாமல் மிகுந்த அவதானத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு முதரமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகல்களை ஏற்படுத்தும் விதமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கின் முன்னாள் முதல்வர் இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்,
அண்மையில் கிரான் மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் தமிழ் மற்றும் முஸ்லம் சமூகங்களிடையே முறுகல்களை ஏற்படுத்தும் விதமான சில சம்பவங்கள் இடம்பெற்றன,
அதன் தொடர்ச்சியாக இன்னும் சில பகுதிகளிலும் இன முறுகல்களை ஏற்படுத்து விதமான இனரீதியான துவேஷங்களை கிளர்ந்திடும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,
எனவே இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான யோசனையொன்றை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நான் முன்வைத்தேன்,
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,ஆன்மீகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பங்குபற்றுதலோடு நல்லிணக்க ரீதியான உரையாடல்களை முன்னெடுத்து இனமுறுகல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரை வேண்டிக் கொண்டேன்,
இதனூடாக இந்த நிலைமைகளின் யதார்த்தத்தை மக்களுக்கு உணர்த்தி இவ்வாறான சதிகளுக்கு பின்புலத்தில் உள்ளவர்களை மக்களின் துணையுடன் அடையாளங்காணுவதற்கு உதவியாக அமையும்.
அத்துடன் தற்போது முறுகல்கள் தொடர்ந்தும் வேறு இடங்களில் இடம்பெறாவண்ணம் பாதுகாப்புக்களை அதிகரிக்குமாறும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் கதைத்துள்ளேன்,நாமனைவரும் ஒன்றிணைந்து நீடித்த சுமுகநிலையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்,
இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக இடம் பெற்ற யுத்த்தில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே என்பது யதார்த்தம்,
கிழக்கில் இன்றும் எமது காணிகள் விடுவிக்கப்படாமல் படையினர் வசம் உள்ளன,இன்னும் மீள்குடியேற்றப்படாமல் எமது பல உறவுகள் வாழ்ந்து கொண்டுருக்கின்றனர்,
அத்துடன் எமக்கான அரசியல் ரீதியான தீர்வையும் இரு சமூகங்களும் இணைந்தே பெற்றுகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது,
ஆகவே நமக்கான தீர்வுகள் கிடைத்து விடக் கூடாது நமக்கான பிரச்சினைகள் என்றும் முற்றுப் பெற்றுவிடக் கூடாது என எண்ணும் சில வஞ்சகர்களே இனங்களிடையே முறுகல்களை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கின்றனர்,
அத்துடன் தற்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன,
இதன்போது எமக்கான தீர்வு மற்றும் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படலாம்,
இவற்றை குழப்புவதற்காகவே சிறுபான்மையினரிடையே மோதல்களை ஏற்படுத்தி எம்மிடையே ஒற்றுமையில்லை இவர்களின் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கினால் இவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் எழும் எனவே இவர்களுக்கு அதிகாரங்களை வழங்க தேவையில்லை என இனவாதிகள் கூறுவதற்கான சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது,
சதிகாரரர்களின் பொய்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு நாம் வ சுய புத்திய இழந்தோமேயானால் இறுதியில் கைசேதப்பட்ட சமூகங்களாகவே வாழ வேண்டியிருக்கும் என்பதை நாம் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்,
எனவே இன நல்லுறவைக் கெடுக்கும் சதிகாரர்களின் கருத்துக்களை புறந்தள்ளி நிதானமிழக்காமல் தமிழர்களும் முஸ்லிங்களும் ஒற்றுமையாக இணைந்து எமக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முன்வர வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்,