தீபத் திருநாளாம் தீபாவளியின் மகிழ்ச்சி ஒளி பிலம்பு தோன்றுவதுபோல இந்துக்கள் வாழும் இடமெல்லாம் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளை இலங்கையில் வாழும் என் சக இந்துக்களுடன் தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்;சியடைகின்றேன். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண கல்வி, விவசாய,இந்து கலாசாரம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தீப திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தீபாவளி என்ற சொல்லுக்கு தீபங்களின் வரிசை என்று பொருள். வரிசையாக விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகை எனவும், நான் என்ற அகந்தை ஒழிக்கப்பட்ட பண்டிகை எனவும் கருதப்படும.; தீபாவளி உலகெங்கும் வாழும் இந்துக்கள் விரும்பிக் கொண்டாடும் பண்டிகையாகவும் திகழ்கின்றது.
பஞ்சம், பசி, பட்டினி என்பவற்றிற்கு விடிவு தேடி புதிய வாழ்வின் ஏக்கங்களை கண்களில் சுமந்து இலங்கை வந்து குடியேறிய இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்வின் இருள் நீக்கி ஒளி பெற்ற ஒரு பெரும் சமுதாயமாக, வரலாற்று மாற்றத்துடன் இத்திருநாளைக் கொண்டாடுவதையிட்டு அச்சமுகத்தின் ஒரு குடிமகன் என்ற வகையில் பெருமிதம் அடைகின்றேன். இந் நிலையினை அடைவதற்கு செய்யப்பட்ட தியாகங்கள் நினைக்கப்படுகையில் நெஞ்சம் புத்தெழுச்சி பெறுகின்றது. வாழப்பட்ட அந்த வாழ்க்கை தந்த அனுபவங்களைக் கொண்டு இந்த தொலைத் தொடர்பு நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இளைய சமுதாயத்தை வழிநடாத்தும் பொறுப்பினை எமது தலைமைத்துவம் செய்து வரும் இவ்வேளை அதன் முழுமையான பிரதிபலனை பெற்று தம் வாழ்வில் ஒளி பெற அவர்களுக்கு வழிகாட்டிட வேண்டிய கடமை நமக்கிருக்கின்றது. இத் தீபத் திருநாளில் அதற்கு நாம் உறுதி கொள்வோம். அத்துடன் நாட்டில் சமாதானம் நிலைத்திருக்கவும், சகோதரத்துவம்,சமத்துவம்,நல்லறவு என்பன தழைத்தோங்கிடவும் நீடித்திருக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என்றார்.
