குறித்த ஆசிரியர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்க முன்னர் விரைந்து செயற்பட்டு ஆளுனர் இந்த நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்.
ஓட்டமாவடி மீராவோடையில் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கு 6 இலட்ச ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை கையளித்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்,
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்,
கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் வௌிமாகாணங்களுக்கு எமது ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது,
இதற்கு முன்னர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் எமது ஆசிரியர்கள் வௌிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட போது நாம் பல போராட்டங்கள் மற்றும் அழுத்தங்களை கொடுத்து எமது ஆசிரியர்களை எமது மாகாணங்களுக்கு பெற்றுக் கொண்டோம்,
எமது பெண் பிள்ளைகளும் வௌிமாகாணங்களில் தூரப் பிரதேசங்களில் உள்ள கல்வியில் கல்லூரிகளில் கற்று மீண்டும் வௌிமாகாணங்களில் கடமைக்காக நியமிக்கப்படுகின்ற போது எவ்வாறு அவர்களால் ஆரோக்கியமான மனநிலையுடன் தமது கடமையாற்ற முடியும்,
மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நாம் ஆட்சியிலுள்ள போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்,
அதன் ஒரு கட்டமாகவே 1700 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அனுமதியை பெற்றோம்,
ஆகவே இம்முறை வௌிமாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்க முன் அவர்களை சொந்த மாகாணத்தில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆளுநர் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.